இலங்கை தமிழர்கள்,இரசிகர்களை மறந்த விஜய்

நடிகர் விஜய், தலைமையிலான இந்த வெற்றிக்கழகத்தின் மாநாட்டை உலகவாழ் மக்களும் அவதானித்துக்கொண்டிருந்தனர். முதலாவது அரசியல் மேடையில் பேசியவற்றை, தேர்தல்களுக்கு பிந்திய காலங்களிலும் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படுமாயின், தமிழகத்தின் வளர்ச்சி எங்கோ? சென்றுவிடும். ஏன்? மத்திய அரசாங்கத்துக்கு சவால் விடும் வகையில், இந்த வெற்றிக்கழகத்தின் பயணம் அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது அரசியல் மாநாட்டை தொடர்ந்து, தமிழக கட்சிகள், கருத்துகளை முன்வைத்துள்ளன. தங்களுடன் கூட்டு அரசியலை செய்வதற்கான ஆதரவு கரங்களையும் நீட்டியுள்ளன. வாழ்த்து தெரிவித்துள்ளன. அத்துடன், பலதரப்பட்ட விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன. அவற்றுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அரசியலில் இறங்கிவிட்டால், எதனையும் தட்டிக்கழித்துவிட்டு முன்னோக்கி பயணிக்கவே முடியாது.

நடிகர் விஜய், அரசியல்வாதியாகிவிட்டார். அவர் நடிகராக இருந்தபோது, இந்தியாவில் மட்டுமன்றி தமிழ்பேசும், தமிழ்மொழியை விளங்கிக்கொள்ளும் ஏனைய மொழிகளை பேசும் இரசிகர்கள் உலகளாவிய இருந்தார்கள். இலங்கையிலும், விஜய் இரசிகர்கள் உள்ளனர். விஜய் இரசிகர்கள் அல்லாதவர்களும் அவருடைய அரசியல் ​பேச்சை கேட்டுக்கொண்டிருந்தனர். எனினும், அவரது முதலாவது பேச்சில், இலங்கையை பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. எதிர்காலங்களில் ஏதாவது கூறுவாறா? என்பதற்கு எதிர்காலமே பதில்சொல்லும்.

தமிழகத்துடன் இலங்கை வாழ் இந்திய தமிழர்களுக்கு தொப்புள்கொடி உறவு இருக்கிறது. பிராந்திய அரசியலில், தமிழக-இலங்கை அரசியலுக்கு ஒரு தொடர்பு இருக்கிறது. இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் ஒவ்வொரு நாளும் விஸ்வரூபம் எடுத்துவருகின்றன. இவை தொடர்பில், ஏதாவது கூறியிருந்தால், இலங்கையில் இருப்பவர்களும், தங்களுக்கு வாக்குரிமை இல்லாவிட்டாலும், இந்தியாவில் அகதிமுகாம்களில் வாழும், இலங்கையர்களும் பெருமைபட்டிருப்பார்கள்.

தமிழக தேர்தலில் இலங்கை பிரச்சினைகளும் பேசும் பொருளாகவே இருக்கும். மீனவர்களின் விவகாரமும் முக்கியமானது. ஆகையால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என பலரும் கூறுகின்ற நிலையில், பிராந்திய அரசியல் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும், தனது முதலாவது அரசியல் பேச்சி, விஜய் தொட்டு சென்றிருக்கலாம். அது ஆரோக்கியமானதாய் இருந்திருக்கும்.

அதேவேளையில்,  “அரசியல் பயணத்தை, விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்” என கூறியிருக்கிறார். ஆக, அவருடைய தெளிவான அரசியல் பயணத்துக்கு நாமும் வாழ்த்துகின்றோம்.

(Tamil Mirror)

Leave a Reply