இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி விலகுகிறார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, கடந்த அக்டோபர் 26-ம் தேதி நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார். நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் தேதியையும் அறிவித்தார்.
இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக மறுத்தார். மேலும் அதிபர் சிறிசேனாவின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்ற கலைப்பு, பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதித்தது. அதன்பின் நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ரணில் தலைமையில் 122 எம்.பி.க்கள் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 3-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயல்பட தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜபக்ச மேல்முறையீடு செய்தார்.
இதனை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச சனிக்கிழமை பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் என்று அவரது மகன் நாமல் ராஜபக்ச ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.