நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.
அத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என கட்சியின் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
அதேநேரம், திராவிட முன்னேற்றக் கழக பாரளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) சார்பில் ரூ.13 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
“கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மட்டும் அடிப்படைத் தேவைப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் பொருள் உதவி அளிப்பது என முதல்வர் அறிவித்து இருந்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த நிதி வழங்கப்பட்டது. தமிழக அரசு தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினை மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சந்தித்து நிதியைக் கையளித்தனர்.
இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராபஜக்ஷவின் கையொப்பத்துடன், தமிழக முதல்வருக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையில், தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி, இலங்கையில் தற்போது நிலவிவரும் கடும் பொருளாதார சூழ்நிலையில், கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு, தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளமை தங்களது நல்லெண்ணத்தை குறித்து நிற்கிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை, அண்டை நாட்டு பிரச்சினையாகப் பார்க்காது, மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களுக்கும், தமிழ்நாடு மாநில அரசுக்கும், இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாக பிரதமர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.