குடியுரிமையும் வாக்குரிமையும் இல்லாமல் ஏறத்தாழ ஒரு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் இங்கே அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், நீண்ட காலக் கோரிக்கைகள் நிறைவேறவும் இன்றைய முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
3000 புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருப்பதுடன், கல்வி-வேலைவாய்ப்பு, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் மாத உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, சுயஉதவிக்குழுக் கடன், திறன் மேம்பாடு இவற்றுடன் குடியுரிமைக்கான முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள 106 மறுவாழ்வு முகாம்களில் வாழ்பவர்களில் இந்தியக் குடியுரிமைப் பெற விரும்புவோருக்கு உரிய ஆவணங்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில், 1986ஆம் ஆண்டு இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இலங்கைத் தமிழ்த் தம்பதிகளுக்குப் பிறந்தவரான நளினி கிருபாகரன், தற்போது திருச்சி கொட்டப்பட்டு முகாமில் வசித்து வருகிறார்.
தனக்கு இந்திய பாஸ்போர்ட் கேட்டு நளினி விண்ணப்பித்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்து, வெற்றி பெற்று, இந்திய பாஸ்போர்ட்டையும் பெற்றார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ உரிய ஆதாரங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க, நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் சாதகமானத் தீர்ப்பை வழங்கினார்.
இந்திய குடியுரிமை சட்டம் 1995, பிரிவு 3ன்படி, ஒருவர் 1950 ஜனவரி 26க்கும், 1987 ஜூலை 1க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பிறந்திருந்தால் அவர் தனது பிறப்பின் அடிப்படையிலேயே இந்திய குடியுரிமைப் பெறத் தகுதி உடையவராகிறார் என்ற அடிப்படையில், 1986ல் இராமேஸ்வரம் மண்படம் முகாமில் பிறந்த நளினி கிருபாகரனுக்கு இந்திய பாஸ்போர்ட் கிடைத்தது.
தற்போது தன் குடும்பத்தாருடன் கொட்டப்பட்டு முகாமில் சிறப்பு அனுமதியுடன் வசித்து வரும் நளினி, வாக்காளர் அடையாள அட்டையையும் பெற்று விட்டார். அவருடைய குடும்பத்தில் மட்டுமல்ல, கொட்டப்பட்டு முகாமில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களில் சட்டப்பூர்வமாக வாக்காளர் அடையாள அட்டை பெற்று வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருப்பவர் நளினி கிருபாகரன் மட்டுமே.
நளினி கிருபாகரன் போலவே மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பெரும்பாலானோருக்கும் குடியுரிமை-வாக்குரிமை என்ற கனவு உண்டு.
வாக்குரிமை பெற்றுள்ள நளினியை செய்தியாளர்கள் சந்தித்தபோது, “தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும், இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும் (மலையகத் தமிழர்) குடியுரிமை வழங்கப்படும் என உறுதிமொழி அளித்துள்ள கட்சிக்கு வாக்களிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. வெளியிட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், “இலங்கையிலிருந்து இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த தமிழர்களும், 1964ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்களும், அவர்களது குழந்தைகளும் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு ஆவன செய்யப்படும். ஏறத்தாழ 35 ஆண்டுகளாக முகாம்களில் தங்க அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் உறவுகளுக்குக் குடியுரிமை வழங்கவும், இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்புவோருக்கு அனைத்து உதவிகள் கிடைக்கவும் புதிய ஒன்றிய அரசு மூலம் ஆவன செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்தியா’ புதிய அரசைக் காணும்போது, இதற்கான முயற்சிகள் வேகம் பெறும் நிலையில், மண்டபம் முகாமில் பிறந்த நளினி கிருபாகரன் மட்டுமல்ல, இலங்கையைச் சேர்ந்த அவரது குடும்பத்தாரும், தாய்த் தமிழகத்தை நம்பி வந்த பலரும் குடியுரிமையும் வாக்குரிமையும் பெறுவார்கள். எல்லாருக்குமான விடியல் அவர்களுக்கும் கிடைக்கும்.
திருவள்ளுவர் ஆண்டு 2055 சித்திரை 5
(Govi Lenin)