போயிங் 737–800 ஜெட் விமானம் புறப்பட்டு சற்று நேரத்தில் தலைநகர் டெஹ்ரானின் தென்மேற்கு புறநகர் பகுதியான பரந்துக்கு அருகில் விழுந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இமாம் கொமைனி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தின் எஞ்சின் ஒன்று தீப்பிடித்ததாக ஈரானின் வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் கசெம் பினியாஸ் தெரிவித்தார்.
இதனைத் தொடந்து விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது என்று பினியாஸ் குறிப்பிட்டுள்ளார். சமூகதளங்களில் வெளியான விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படங்களும் எவரும் உயிர்தப்ப வாய்ப்பு இல்லை என்பதை காட்டுகிறது.
விவசாய நிலம் ஒன்றில் விமானம் விழுந்திருப்பதோடு உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சிதறிக் காணப்படுவதாக சம்பவ இடத்திற்குச் சென்ற ஏ.பி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் விபரித்துள்ளார்.
இந்த விமானம் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி பயணித்தபோதே இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளது.
நேற்றுக்காலை புறப்பட்ட இந்த விமானம் திட்டமிட்ட நேரத்தை விடவும் ஒரு மணி நேரம் தாமதித்தே பயணத்தை ஆரம்பித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 83 ஈரானியர்கள், 63 கனடா நாட்டவர்கள் மற்றும் விமான பணியாளர்கள் உட்பட 11 உக்ரைன் நாட்டவர்கள், 10 சுவீடன் மற்றும் நான்கு ஆப்கான், தலா மூன்று பிரிட்டன் மற்றும் ஜெர்மன் நாட்டவர்கள் அடங்குகின்றனர். விமான விபத்து என்று நம்பப்படும் வீடியோ ஒன்று ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விமானம் ஒன்று வானத்தில் தீப்பற்றி தரையில் விழுந்து வெடிக்கும் காட்சியை அந்த வீடியோ காட்டுகிறது.
ஈரானில் உக்ரைன் விமானம் விபத்துக்கு உள்ளானதற்கும், ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை தெரியவில்லை.
எனினும் இந்த விமான விபத்து தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத ஊகங்களை வெளியிடவேண்டாம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உக்ரைனுக்குக் கொண்டுவர, மூத்த அமைச்சர்கள் உட்பட பல்வேறு அதிகாரிகளைக் கொண்ட அவசரக் குழுவை அமைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.