ஈரானில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் போராட்டங்கள், தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நிலையில், அப்போராட்டங்களுக்கு எதிராகவும், அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் இடம்பெறும் போராட்டங்கள் அதிகரித்திருப்பதோடு, போராட்டங்களுக்கான எதிர்ப்பும் அதிகரிப்பது போன்ற பார்வை ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரப் பிரச்சினைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டங்கள், அரசாங்கத்துக்கு எதிரானவையாக மாறி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆரம்பத்தில் பெருமளவுக்குக் கவனிக்கப்படாத இப்போராட்டங்கள், இப்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. சர்வதேச ரீதியாக, இப்போராட்டங்களுக்கான ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. இந்த ஆதரவு தான், இப்போது பிரச்சினைகளையும் ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
இப்போராட்டங்கள் தொடர்பான அதிக கவனம் ஏற்பட்ட பின்னர், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இப்போராட்டங்கள் தொடர்பான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். நேற்று முன்தினம் மாலை வெளியிட்ட டுவீட்களில், “கொடூரமானதும் ஊழல்மிக்கதுமான ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக, ஈரானிய மக்கள் செயற்பட ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றும் “அம்மக்களுக்குப் போதிய உணவு இல்லை, அதிக பணவீக்கம், மனித உரிமைகள் இல்லை” என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு முன்னரும், இதே பாணியிலான கருத்துகளை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான கருத்துகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசாங்க ஆதரவாளர்கள், இப்போராட்டங்களின் பின்னால் ஐக்கிய அமெரிக்கா இருக்கிறது எனக் கூறிவருகின்றனர். அரசாங்க ஆதரவாளர்கள் மாத்திரமன்றி, 2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற மாபெரும் போராட்டங்களை நடத்திய சீர்திருத்தவாதிகள் கூட, தற்போதைய போராட்டங்களையும் அதற்கு ஐ.அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் ஆதரவையும் கண்டிக்கின்றனர். ஆனால், மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனஞ்செலுத்த வேண்டுமென்பது, அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ட்ரம்ப்பின் டுவீட்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, “பயனற்றதும் அவமானப்படுத்துகின்றதுமான டுவீட்களை அனுப்பி, தனது நேரத்தை, ட்ரம்ப் வீணாக்குகிறார். தனது சொந்த நாட்டிலுள்ள வீடற்ற, பட்டினியில் காணப்படும் மக்கள் தொடர்பில் அவர் கவனம் செலுத்துவது பயனுடையதாக இருக்கும்” என்று தெரிவித்தது.