இம்மூவரும் அதிகம் எழுதுபவர்கள் என்று சொல்வதைவிடவும் எதை எழுதவேண்டும்/ எப்படி எழுதவேண்டும் என்பதைத் தாங்கள் கண்டடைந்த சில கலை மற்றும் சிந்தனைத் தளத்திலிருந்து எழுதுகிறார்கள். அவை சரியானவையா? சிக்கலானவையா? நிகழ்கால வாழ்வின் மீது தாக்கம் ஏதோ ஒன்று கிடைப்பதாக நம்புகிறார்கள். அதனால் வாசிக்கிறார்கள். இந்தியத் தமிழ் வாழ்வு சார்ந்தே அதிகம் யோசிக்கும் -விவாதிக்கும் இவர்களின் எழுத்துகள் ஈழத்தமிழ் வாசகர்களால் ரசிக்கப்படுவதன் காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை இன்னும் ஆழமாக யோசிக்கவேண்டும். ஈழத்தமிழர்களுக்குள் ஓடும் இந்துமத நம்பிக்கை மற்றும் தத்துவப் பிடிப்புகளால் கூட ஜெயமோகன் விரும்பப்படலாம். அதேபோல் புலம்பெயர்ந்த ஐரோப்பிய வாழ்வின் சுதந்திரம் தரும் – குறிப்பாகப் பாலியல் சுதந்திரம் பற்றிய சொல்லாடல்களை முன்வைப்பவர் என்பதால் சாருநிவேதிதா கவர்பவராக இருக்கலாம்.
மனுஷ்யபுத்திரனின் மொழியும் கவிதையாக ஒன்றை வடிவமைக்கும் முறையும் யாரையும் ஈர்க்கக் கூடிய ஒன்று. ஒருவேளை ஈழத்தமிழர்களின் வலியும் வேதனையுமான வாழ்நிலையிலிருந்து தப்பிக்கும் மனநிலையை அவை உருவாக்குகின்றன என்பதுகூடக் காரணமாக இருக்கலாம். போரையும் சொந்த வெளியற்ற அகதிவாழ்வையும் மறப்பதற்கான மறதிக்குளிகைகளாக அவை தோன்றலாம்
(நன்றி/ முகடு/பிரான்ஸ்)