மேலும், அசோவ் கடற்கரையில் உள்ள மரியுபோலில் இப்போது வெறும் 1000 உக்ரைனிய வீரர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் அங்குள்ள மிகப் பெரிய இரும்பு ஆலையில் தஞ்சமடைந்திருப்பதாகவும் ரஷ்யப் படைகள் தெரிவித்துள்ளன. முதலில், அந்த ஆலையை தகர்க்க உத்தரவு வந்ததாகவும், ஆனால் தற்போது அதிபர் புதின் ஆலையை சுற்றிவளைத்து ஈ கூட வெளியே செல்லாத வகையில் சீல் வைக்கச் சொல்லியிருப்பதாக ரஷ்ய படைகளின் கிழக்கு கமாண்டர் தெரிவித்துள்ளார்.
8 வாரங்களாக நடக்கும் போர்…
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அதிபர் புதின் அறிவித்தார். நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் மீதான உக்ரைனின் ஆர்வம் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், நாசி ஆதரவு ஆட்சியை அப்புறப்படுத்தவே ராணுவ நடவடிக்கை என்று கூறினார். முதல் நாளிலேயே ரஷ்யப் படைகள் வெகு வேகமாக முன்னேறியதால் ஓரிரு வாரங்களில் போர் முடிந்துவிடும், தலைநகர் கீவ் வீழ்ந்துவிடும் என்று கணிப்புகள் வெளியாகின.
ஆனால், தங்களை ஐரோப்பிய ஒன்றியத்தில், நேட்டோவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கைகளை அந்த அமைப்புகள் புறக்கணித்தாலும் கூட அதிபர் ஜெலன்ஸிகிக்கு இன்றளவும் ராணுவ உதவிகளைக் குவித்து வருகின்றன.
அண்டை நாடான போலந்து, உக்ரைனில் இருந்து எத்தனை லட்சம் பேர் வந்தாலும் கூட இன்முகத்துடன் அகதிகளை ஏற்று ஆதரவு கொடுக்கிறது. பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன், உக்ரைனுக்கு நேரில் சென்று கீவ் நகரில் வலம் வந்து சர்வதேச கவனத்தை ஈர்த்தார். நேட்டோவில் உள்ள உறுப்பு நாடுகள் முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டனின் ஆதரவோடு ஜெலன்ஸ்கி போரை இன்றளவும் எதிர்கொண்டு வருகிறார்.