முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கோரி, பிரதேச மக்கள், சனிக்கிழமை (11) முதல் மேற்கொண்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன், இந்தப் போராட்டம் கவனயீர்ப்பு போராட்டமாக தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை (11) முதல், உணவுத் தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடைந்தது. கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட புலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகியவற்றை போராட்டம் மூலம் பெற்றுக்கொண்ட மக்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.