இம்பால் : மணிப்பூரில் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த இரோம் ஷர்மிளா, நீதிமன்ற காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்பும், தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.
மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகிலுள்ள கிராமம் ஒன்றிற்குள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு (2-11-2000) நுழைந்த அசாம் ஆயுதப்படை பிரிவினர், நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் பலியாயினர். இதனையடுத்து இரோம் ஷர்மிளா எனும் இளம்பெண், பலிக்கு காரணமான மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
தற்கொலைக்கு முயன்றதாக குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்த அம்மாநில போலீசார், அவருக்கு மூக்கின் வழியாக திரவ உணவை செலுத்தி வந்தனர். 15 ஆண்டுகளாக நடந்து வந்த இவர் மீதான தற்கொலை வழக்கில், கடந்த 2014ம் ஆண்டு ஷர்மிளா விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. விடுதலைக்குப் பின்னும், சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர்ந்து உண்ணாவிரதத்தை தொடரந்த அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்ற காவலில் வைத்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற காவலிலிருந்து நேற்று(29-02-16) ஷர்மிளா விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின்பும் மீண்டும் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஷர்மிளா தொடங்கியுள்ளார்.