இது தொடர்பாக அவர், “மனிதர்களுக்கு எதிராக எந்த மதமுமே வன்முறையை போதிக்கவில்லை. குறிப்பாக இஸ்லாம் மதம் அமைதியையே வலியுறுத்துகிறது. இணையத்தில் வெளியான மிக மோசமான வன்முறை வீடியோ பதறவைக்கிறது. அதைச் செய்தவர்கள் எவ்வித நேர்மையுமில்லாதவர்கள். ஏழை நபர் மீது மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் வன்முறையை பாதையாகக் கொண்டவர்கள். இந்த சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தியாவில் தலிபான் மனநிலை ஓங்க இந்திய முஸ்லிம்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் தாய்நாட்டை பாதுகாப்போம்” என்றார்.
ஜமாத் உலேமா இந்த் பொதுச் செயலாளர் மவுலானா ஹகிமுதீன் காஸ்மியும் இந்த படுகொலையை கண்டித்துள்ளார். இந்த சம்பவத்தை யார் செய்திருந்தால் அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார். நாட்டில் சட்டம் இருக்கிறது. சட்டத்தை யாரும் கையில் எடுக்கமுடியாது என்று கூறியுள்ளார்.
பொது இடத்தில் படுகொலை: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் நேற்று அத்துமீறி புகுந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸார் விசாரணையில், முஸ்லிம்களின் இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து தவறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் கன்னையா லால் படுகொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கன்னையா லாலை படுகொலை செய்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு நபர் கவுஸ் முகமது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பாதுகாப்பு: இந்த சம்பவத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் சைபர் போலீஸாருக்கு மேலிட உத்தரவு பறந்துள்ளது. சைபர் பிரிவு போலீஸார் சமூகவலைதளங்களை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். ஏதேனும் மதவன்முறையை தூண்டும் விதமான பதிவுகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம், ஹனுமன் ஜெயந்தியின்போது மத வன்முறை ஏற்பட்ட டெல்லி ஜகாங்கிர் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு, பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் உதய்பூர், ஜெய்பூரில் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதுமே பாதுகாப்பு, கண்காணிப்பை முடுக்கிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.