விழா ஒன்றில் பங்கேற்க வந்த கேரள முதல்வரை, ‘உம்மன்சாண்டி…’ என்று பெயர் சொல்லி அழைத்து, இரண்டாம் வகுப்பு மாணவி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த மாணவியை நோக்கி, உம்மன்சாண்டி சிரித்த படியே நடந்து சென்று, அவரது கோரிக்கையை கேட்டு நிறைவேற்றினார் தன்னை பெயர் சொல்லி அழைத்ததற்காக பாராட்டினார்.
கோழிக்கோடு மாவட்டம், நடைக்காவு அரசு ஆசிரியர் பயிற்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள, அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி மேடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ‘உம்மன்சாண்டி…’ என்ற மழலை குரல் அழைப்பை கேட்டு, முதல்வர் ஒரு வினாடி நின்று திரும்பி பார்த்தார். அப்போது, ஒரு மாணவி கையை உயர்த்திபிடித்து, முதல்வரை தன் பக்கம் அழைத்தார்.அவர் எந்த புரோட்டாகாலையும் பார்க்கவில்லை. அந்த மாணவி பக்கம் நடந்து சென்று, மாணவியை கட்டி அணைத்து, ‘என்ன வேண்டும்’ என்று கேட்டார்.
அதற்கு அந்த மாணவி, ‘தன் பெயர் சிவானி என்றும், இரண்டாம் வகுப்பு படிப்பதாகவும், தன்னுடன் படிக்கும் அமல் கிருஷ்ணன் என்ற மாணவனுக்கு குடியிருக்க வீடு இல்லை; அவனது பெற்றோர் நோய்வாய்பட்டுள்ளனர் என்றும், அவனுக்கு அரசு உதவ வேண்டும்’ என்றார்.
அந்த மழலையின் கோரிக்கையை, முதல்வர் கவனமாக கேட்டார். அந்த பள்ளி தலைமை ஆசிரியையை அழைத்து, மாணவி சிவானி கூறியது, ‘உண்மைதானா?’ என்று கேட்டார். அவரும், உண்மைதான் என்று சொல்ல, அதை ஒரு மனுவாக எழுதி கொடுக்க சொன்னார். அந்த இடத்திலேயே, மூன்று லட்சம் ரூபாய் அனுமதித்து உடனடியாக வீடு கட்டி கொடுக்க முதல்வர் உத்தரவிட்டு, அந்த மனுவில் கையெழுத்திட்டார். சிவானியும், கூட இருந்த பிற மாணவ, மாணவியரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.பின், விழாவில் பேசிய முதல்வர், தன்னை உம்மன்சாண்டி… என பெயர் சொல்லி அழைத்த அந்த மாணவியை, வெகுவாக பாராட்டினார்.