அமைச்சர் விமல்வீரவங்சவுக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் இரண்டு கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே ‘ஸ்ரீலங்கா பெரமுனவின் தலைமை பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும்’ என்று என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2005ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது தான் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கு மிகக் கடினமாக உழைத்ததாக அப்போது ஜே.வி.பி. குற்றம்சாட்டியதாக கூறினார்.
“மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கு மிகக் கடினமாக உழைத்தது தவறென்றால் நான் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். யுத்தம் நடைபெற்றபோது ஜே.வி.பி. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சி செய்தபோது, நான் அரசாங்கத்துக்கு யுத்தம் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியது தவறு என்றால் நான் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
“அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷ்வின் அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தோல்வியடைந்த போது, பெப்ரவரி மாதம் நுகேகொடையில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்ட மஹிந்தவின் வெற்றிக்கான பயணத்தின்போது முன்னிற்று உழைத்த நான்கைந்து பேரில் நானும் ஒருவராக இருந்தமை தவறு என்றால் அதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனவும் விமல் கூறினார்.
இவை எல்லாம் தவறு என்றால்தான் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று தெரிவித்த அவர், அதேபோன்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறி அதனை யதார்த்தமாக்குவதற்காக உழைத்தது தவறு என்றால் தான் அதற்காக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கூறினார்.
“ஸ்ரீலங்கா பெரமுனவின் உயர்ந்த பதவியொன்றில் ஜனாதிபதி இருக்க வேண்டும் என்பதே எமது அபிப்பபிராயமாகும். அதற்காக மஹிந்த ராஜபக்ஷ தலைமைப் பதவியில் இல்லாமலிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. மஹிந்த ராஜபக்ஷவை தலைமைப் பதவியில் இருக்கும் போதே, இன்னுமோர் உயர் பதவியில் கோட்டாபய ராஜபக்ஷ இருப்பாரானால் இந்த நாட்டில் அரசியல் சக்திகளுடன் அவருக்கு நெருக்கம் அதிகரிக்கும்.
“அத்துடன், கட்சியை விமர்சிக்கக் கூடாது என்று சட்டம் இல்லை. அரசியலமைப்பில் அவ்வாறு கருத்து சுதந்திரம் வரையறுக்கபடவில்லை” என்று, விமல் மேலும் தெரிவித்தார்.