மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 12பேர் அடங்கிய குழுவொன்று சென்றிருந்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள ‘தி ஸ்டார்’ பத்திரிகை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும், அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, இன்று புதன்கிழமை (07) வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, மலேஷிய அரசாங்கம், தனது கவலையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில், மலேசிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், ‘சம்பவம் தொடர்பான மலேஷிய அரசாங்கத்தின் கவலையை வெளியிடுவதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, மலேஷிய சட்டத்தின் கீழ், தகுந்த தண்டனை வழங்கப்படும்’ என்றும் குறிப்பிட்டுள்ளது.
கண்டனங்கள்
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா அநுரகுமார
திஸாநாயக்க ஆகியோர் கண்டித்துள்ளனர்.
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அன்சார், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் எம்.பி.யான தினேஷ் குணவர்தன, நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், நாம் தமிழர் கட்சியின் மலேஷியக் கிளையினரே இந்தத் தாக்குதல் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவந்திருப்பதாகவும் அதைவிடுத்து இலங்கைத் தமிழர்கள் எவரும் இச்சம்பவத்தில் தொடர்புபட்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
‘இந்தச் சம்பவத்தை, இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. சம்பவத்தை அடுத்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க நாம் செயற்பட்டிருந்தோம். வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால், இலங்கைக்கான மலேஷிய உயர்ஸ்தானிகர் அழைக்கப்பட்டு, சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது’ என்று பிரதமர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், ‘நாம் தமிழர் கட்சியினரே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தக் கட்சி, இந்தியாவின் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது. இதன் கிளையான நாம் தமிழர் இயக்கமொன்று, மலேஷியாவில் இருக்கிறது. இவர்களே, இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதைவிடுத்து, முன்னர் இலங்கையில் இருந்தவர்களோ அல்லது தற்போது இலங்கையில் இருப்பவர்களோ அல்லது இலங்கைப் பெற்றோரை கொண்டவர்களோ, இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேஷியத் தமிழர்களே’ என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்
‘மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார், கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக நான் கண்டிக்கிறேன். இது கண்டிக்கப்பட வேண்டிய சம்பவமொன்றாகும். குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இலங்கையர்கள் கிடையாது என்று பிரதமர் கூறினார். ஆயினும் கூட, அவ்வாறானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு இலங்கையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும்.
இந்த நாடு, தற்போது ஸ்திரதன்மையையும் ஒற்றுமையையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலையில், அத்தகைய சம்பவங்கள் அநாவசியமானவை. இந்த மாதிரியான சம்பவங்களின் பின்விளைவுகள், எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்று புரியாத ஆட்களின் முட்டாள்தனமாக செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படக்கூடாது. மாறாக, அவை புறக்கணிப்படவும் நிறுத்தப்படவும் வேண்டும்’ என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்திய அடிப்படைவாத பிரிவினைவாதக் குழுவையும் வடக்கு மக்களையும், ஒருபோதும் இணைத்துச் சிந்திக்க கூடாது என்று, ஜே.வி.பி.யின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க எம்.பி, சபையில் வலியுறுத்தினார்.
அவர் இது தொடர்பில் மேலும் பேசுகையில்:
‘நாடொன்றின் தூதுவர் (அல்லது உயர்ஸ்தானிகர்) சம்பந்தப்பட்ட நாட்டையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அந்த வகையில், இலங்கை உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது, எமது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஒத்ததாகும். சகல நாடுகளும் அந்தந்த நாட்டிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். அவ்வாறான பாதுகாப்பை, மலேஷியாவும் வழங்கியிருக்க வேண்டும். அங்கு கடந்த சில நாட்களாக இடம்பெற்றிருந்த சம்பவங்களை அறிந்தாவது அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும்’ என்றார்.