உயிரை பறித்த முகநூல் அறிவுரை
இன்றைய காலப்பகுதியில் முகநூல் மூலம் பலரும் பல்வேறுபட்ட சம்பவங்களினை மற்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பலர் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே சம்பவத்தின் உண்மைத் தன்மையினை ஆராயாமல் பகிர்ந்து வருகின்றனர். முக்கியமாக ஓர் தகவலை யார் எழுதினார்கள் அவரின் கல்வித்தகமை மற்றும் உண்மைத்தன்மை பற்றி ஆராய்வதில்லை.
அண்மையில் கம்பஹாவில் முகநூலில் வெளிவந்த வைத்திய அறிவுரையை பார்த்த ஒருவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக கஜ மடார மரத்தின் இலைகளை ஜுஸ் பண்ணி குடித்த நிலையில் 10 நிமிடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
நாம் இனி எவ்வாறு இறந்தார் என்று அலசுவோம். சிங்களத்தில் கஜ மாடார மரம் என்றைக்கப்படுவதின் தாவரவியல் பெயர் Cleistanthus collinus. இது தமிழில் ஒடுவந்தலை/ஓடுவன் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக இடத்துக்கு இடம் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. இது காலாகாலமாக சிங்கள மக்களினால் மருத்துவ தேவைக்காக பாவிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகின்றது. இதன் இலைகள் பின்வரும் நஞ்சு பதார்த்தங்கள் காணப்படுகின்றன Diphyllin , Cleistanthin A and B
இவை மனிதனின் சிறுநீரகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக எமது உடலில் பொட்டாசியம் போன்ற அயன்கள் அதிகரிக்கும். இதன் காரணமாக இருதய துடிப்பின் ரிதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு சடுதியான இறப்பு ஏற்படும் அத்துடன் இது நேரிடையாகவும் இருதயத்தினை தாக்கும் தன்மை உடையது. மேலும் குருதி அமுக்கத்தினையும் சடுதியாக குறைக்கும் தன்மை உடையது. (Hypokalemic metabolic acidosis, hypotension and acute kidney injury )
இன்று எம் முன்னே உள்ள கேள்வி யாதெனில் முன்பு இயற்கை வைத்தியத்தில் பாவித்த இவ்வாறன தாவரங்கள் எவ்வாறு இக்காலத்தில் நஞ்சாக மாறுகின்றது என்பதே. அதற்கு பின்வரும் காரணங்களினை குறிப்பிடலாம்.
- முற்காலத்தில் தாவரங்களின் இலைகள் சிறு உரல் போன்றவற்றில் இடித்து வெறும் கையினால் பிழிந்தே சாறுகள் பெறப்பட்டன. இதன் காரணமாக மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் அளவினை விட குறைந்த அளவிலேயே அவற்றில் பதார்த்தங்கள் இருக்கும் (sub lethal dose). ஆனால் தற்காலத்தில் நாம் இவ்வாறன செயன்முறைக்கு மின்சாரத்தின் மூலம் இயங்கும் உபகரணங்களையே பாவிக்கின்றோம் இதன் மூலம் இலைகள் நன்றாக அரைக்கப்படுவதினால் . இவ்வாறு பெறப்படும் ஜூஸில் அதிகளவு நஞ்சு பதார்த்தங்கள் இருக்கும் (toxic dose).
- மேலும் சிலர் நினைப்பார்கள் இலையில் இருந்து பெறப்படும் ஜூ ஸ் இயற்கையானது தானே. எனவே நாம் எவ்வித பிரச்சினையும் இன்றி வேண்டிய அளவில் பாவிக்கலாம் என்று. அக்கருத்து மிக தவறானது. இதன் காரணமாகவே எம் முன்னோர்கள் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் போன்றவற்றில் பல்வேறு பட்ட மருந்து அளவுகளை உருவாக்கினர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதே உண்மை யாகும்.
- வைத்தியர்கள் இயற்கை வைத்தியத்தில் மருந்துகளை பரிந்துரைக்கும் பொழுது கட்டாயம் உணவு கட்டுப்பாடுகள் செய்வார்கள் . அதாவது சில மருந்துகளை உணவுடன் எடுக்க சொல்வார்கள். வேறு சில மருந்துகளை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இவ்வாறு சொல்வதன் நோக்கம் குறிப்பிட்ட மருந்துகளின் அகதுறிஞ்சலை கட்டுப்படுத்தல் ஆகும். பொதுவாக மருந்துகள் மற்றும் ஏனைய நஞ்சு பதார்த்தங்கள் வெறும் வயிற்றில் அதாவது உணவுகால்வாயில் வேறு உணவுகள் இல்லாத பொழுது கூடுதலான அளவில் உறிச்சப்படும்.