உயிர்வேதியியல் மூலக்கூறு ஆய்வுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

 

வேதியியலுக்குக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கபப்ட்டுள்ளது. உயிர் வேதியியல் மூலக்கூறு ஆய்வுக்காக இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் 2017-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசை இன்று (புதன்கிழமை) நோபல் பரிசு கமிட்டி தலைவரால் அறிவிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ழாக் துபோசே, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோகிம் பிராங்க், லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உயிரி வேதியியலை புதிய யுகத்தை நோக்கி நகர்த்திய ஆய்வுக்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இம்முவரும் உயிர் மூலக்கூறு வடிவங்களை எளிமையாக படம்பிடித்து ஆய்வில் நுணுக்கங்களை அதிகரிக்க மேம்பட்ட முறையிலான கிரையோ எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபியை கண்டுபிடித்துள்ளனர். உயிரி வேதியல், மருத்துவ துறை ஆகியவற்றில் இந்த கண்டுபிடிப்புகள் முக்கிய பங்காற்ற உள்ளன. விரைவில் உயிர் மூலக்கூறுகள் குறித்த விரிவான, விளக்கமான, நுட்பமான படங்கள் நமக்குக் கிடைக்கும்.

மானுடக் கண்களுக்குத் தெரியாத விஷயங்கள் ஏராளமாக உள்ளன, இவற்றை வெற்றிகரமாக படம்பிடிக்கும் போதுதான் விஞ்ஞானத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. இதுவரை உயிர்வேதியியல் வரைபடங்கள் உயிரிகளின் மூலக்கூறு அமைப்புகளை சரிவர படமாகக் காண்பிக்கவில்லை, படங்களுக்குப் பதிலாக வெற்றிடம்தான் அங்கு இருக்கும். தற்போது இந்த நோபல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கிரையோ-எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப் இதனை புரட்சிகரமாக மாற்றியமைக்கும். இதனால் மருத்துவம் மற்றும் மூலக்கூறு துறையில் புதிய கண்டுபிடிப்புகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.