மிக்க அவதானமாக செயற்பட வேண்டிய நேரமிது
வாராந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்ர் டாக்டர் ராஜித சேனாரட்ண அவர்கள் இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லையென்று தெரிவி;த்தமை விரைவில் மீண்டுமொரு சங்கடமான நிலைமையை சிறைக்கைதிகள் மத்தியில் ஏற்படும் என்ற ஐயம் எனக்கு எழுக்கிறது. கைதிகள் குற்றம் செய்தார்களோ இல்லையோ என்பது அல்ல எமது பிரச்சனை. அவர்கள் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தமையால் அவர்கள் செய்த குற்றம் எதுவாக இருந்தாலும் அனுபவித்த தண்டனை அதிகமாகையால் போதுமானதாகும். அந்த அடிப்படையில்தான் அவர்களின் விடுதலையைக் கோரி இத்தனை போராட்டங்கள் நடந்தது மட்டுமல்ல இறுதியில் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோர் தலையிட்டு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். ஆனால் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன விடுத்துள்ள அறிக்கை மீண்டும் பிரச்சினையை உயிர்பெறச் செய்யும் என்பது எதுவித சந்தேகமும் இல்லை.
ஆகவே இதுபோன்ற பழைய சந்தர்ப்பங்களில் தடுப்புக்காவலில் இருந்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் தெரிவாகியிருக்கிறார்கள். இதே நடைமுறையை அரசு கையாள தவறுமாயின் பல சிரமத்தின் மத்தியில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசுக்கு நிச்சயமாக பெரும் சங்கடத்தை உருவாக்கும். இதனை கவனத்திற்கெடுத்து அரசு அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை வேண்டுகிறது. பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளாக செயற்படும் த.தே.கூ உட்பட சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் குறிப்பாக சிறுபான்மை இன பிரதிநிதிகளை மிக்க பணிவாக வேண்டுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இத்தகையவொரு வேண்டுகோளை அரசுக்கு விடுகின்ற வேளை சில நடைமுறைகளை அவசியம் கவனத்திற்கொள்ள வேண்டும். வாய்ப்பும் வசதியும் கிட்டிவிட்டால் எவரும் எதையும் பேசலாம் என்று எண்ணக்;கூடாது. இலங்கை சுதந்திரமடைந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிட்டவில்லை. அதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் நமது தலைவர்கள் சிலரும் அவர்களின் பேச்சுக்களுமே. நம்மை நாமே ஆளும் வரை போராடுவோம் என்று கூறி வந்தவர்கள் இன்று பழைய குருடி கதவை திறவடி என்பது போல “இனவாதம் தொடருமானால் ஈழம் உருவாக வழியேற்படும்” என முழங்க ஆரம்பித்து விட்டனர். இது நல்ல சகுணமுமல்ல. அடிக்குஅடி பதிலும் அல்ல ஏற்கனவே நடைபெற்ற போரில் அழியாதது எதுவும் இல்லை. அழிப்பதற்கும் இனியெதுவும் இல்லை. பசியும் பட்டினியும்தான் எமக்கு மிஞ்சியது. ஆனால் சிலரின் கொழுப்பு மட்டும் இன்னமும் கரையவில்லை. ஏற்கனவே நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள், புத்திஜீவிகள், குழந்தைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள் என்று எண்ணிக்கொண்டே போகலாம். ஆனால் மக்கள் இதற்குத் இனியும் தயாரில்லை.
யுத்தத்தை நிறுத்த எதுவித நடவடிக்கைகளை எடுக்காமல் இளைஞர்களுக்கு உற்சாகமளித்து குற்றங்கள் புரிந்திருந்தால் அவ்வாறே அவர்களை செய்ய வைத்துவிட்டு, யுத்த குற்றங்களுக்காக அவர்களை விசாரிக்கும்படி பிடிவாதமாக இருப்பது த.தே.கூ இன் சில உறுப்பினர்களின் தவறான நடவடிக்கையாகும். இதனை தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டித்து வந்திருப்பது மட்டுமல்ல இன்றும் அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது. காரணம் புலிகளின் ஒரு பகுதியினர் பலாத்காரமாக இணைக்கப்பட்டவர்களாவர். அவர்கள் நினைத்த எதையும் செய்யவும் முடியாது, சொன்னதை செய்யாமல் மறுக்கவும் முடியாது. அவர்களில் பெரும் பகுதியினர் கருவிகளாகவே பாவிக்கப்பட்;டார்கள். ஆனால் இராணுவத்தினருடைய நிலைப்பாடு பெருமளவில் வித்தியாசமானதாகும். இந்த வேறுபாட்டை எடுத்துக்கூற தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் ஏன் முடியவில்லை. அண்மையில் பெண் போராளி தமிழினியின் இறுதிக் கிரிகையைகளில் நான் கலந்துகொண்டபோது துக்கம் தாங்கமுடியவில்லை. ஏனென்றால் அப்பெண் பல திறமைகளை கொண்டிருந்தவர். யுத்தம் நிறைவடைந்த பின்பும் கூட வாய்ப்பு கிட்டியிருந்தால் கல்வித்துறையில் பல முன்னேற்றத்தையும் கண்டிருக்கக்கூடும். இவர் போன்ற ஆயிரக்கணக்கான போராளிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு காப்பாற்றத் தவறிவிட்டது. 2009ம் ஆண்டு புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் திரு. சிவ் சங்கர் மேனன் த.தே.கூ இன் தலைமையை உடன் டில்லி வருமாறு அழைப்பு விட்டிருந்தார். நிச்சயமாக இவர்களை அவர் விருந்துக்கு அழைக்கவில்லை. மாறாக யுத்தத்தை நிறுத்தி பொது மக்களையும், போராளிகளையும் காப்பாற்ற வழிவகை பற்றி கலந்துரையாடவே என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் அவருடைய அழைப்பை நிராகரித்து, இந்திய அரசுக்கு சம்பந்தமில்லாத, “யுத்தத்தை முதல் நிறுத்துங்கள்” என்று மக்களையும் போராளிகளையும் காப்பாற்ற தேடிவந்த வாய்ப்பை இழந்தவர்கள்தான் த.தே.கூ இனர். சிலர் கூறுவதுபோல நாற்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இல்லாது போனால் த.தே.கூ கூறுவது போல ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்களின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். இந்த இழப்புக்கள், அழிவுகள் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டு மீண்டும் போர் முரசு கொட்ட ஆரம்பித்து விட்டார்கள். மீண்டுமொரு போர் அப்படி நிகழ்ந்தால் வெல்ல முடியுமா? உயிரிழப்புக்களை சொத்திழப்புக்களை தவிர்க்க முடியுமா? அல்லது அவர்களுடைய பதவிகளைத்தன்னும் காப்பாற்ற முடியுமா? எதுவும் முடியாது. இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் “சனல் 4 வை பரணகம ஏற்றிருப்பதால் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என கூறியிருக்கின்றார். இந்த உறுப்பினர்தான் போரில் அதிக மக்களை கொன்றவர்கள் புலிகள் என வாய்கூசாமல் கூறியவர். இந்த ஒரு வார்த்தை போதும் இந்தப் பிரச்சனையில் த.தே.கூ யை அவமானப்படுத்தி தலைகுனிய வைக்க. “வேலையற்றவர்கள்தான் புலி இயக்கத்தில் சேர்ந்தவர்கள” என்று கூறியதும் இந்த பெரியவர்தான். ஆனால் இவருக்கு பெரும் பாராட்டுக்கள் கிடைக்கின்றன. த.தே.கூ இற்கு எக்கட்டத்திலும் நான் கூறும் ஆலோசனை அவர்களுக்கு ஒவ்வாமையாக இருப்பின் என்னைத்தவிர ஏனைய தமிழின தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டாக நடவடிக்கை எடுக்கலாம். இதுவரை என்னுடன் முரண்பட்ட கருத்துக்களில் எப்பொழுதும் நான் கூறியதே சரியாகவும் அவர்கள் எடுத்த முடிவுகள் அத்தனையும் காற்றோடு பறந்துவிட்டன. தயவு செய்து த.தே.கூ தலைமை இது போன்றவர்களை மௌனம் சாதிக்க வைத்து கூட்டுச்சேர்ந்து செயற்பட்டால் பல விடயங்களுக்கு நல்ல தீர்வு காணமுடியும்.