“எங்கே போவது, எங்கே தேடுவது?”: அவலக் குரல்கள்

வயநாட்டின் மேப்பாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணாக 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே சிகிச்சைப் பெறக்கூடிய சிறிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரிசையாக கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் உடல்களுக்கு மத்தியில் அழுது வீங்கிய கண்களுடன் தங்களின் அன்புக்குரியவர்களை உறவினர்கள் தேடும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. காயங்களுடன், குளிரில் விரைத்து கிடக்கும் உறவினர்களின் உடல்களைப் பார்த்து சிலர் மனமுடைந்து செய்வதறியாது நிற்கின்றனர். இன்னும் சிலர் அந்த உடல்களில் தங்களின் உறவினர்கள் யாரும் இல்லை என்பதை கண்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

நிலச்சரிவில் காணாமல் போன இரண்டு குழந்தைகள் உட்பட தனது குடும்பத்தினரை கலங்கியபடி தேடிக்கொண்டிருக்கிறார் இளம்பெண் ஒருவர். யாரோ ஒருவரால் காப்பாற்றப்பட்ட அப்பெண் தனது குடும்பத்தினர் இங்கு அனுமதிக்கப்பட்டிருக்காலம் என்ற நம்பிக்கையில் அவர்களைத் தேடி வந்ததாக தெரிவித்தார். அவர் கூறுகையில், “எங்கே போவது, எங்கே தேடுவது என்று தெரியவில்லை. எனது குழந்தைகளையும் காணவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்கிறார்.