எந்த ஈஸ்வரனாக இருந்தாலும் சரி, காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களின் ஏகோபித்த தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவதை அனுமதிக்கவே முடியாது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு காரைதீவு பிரதேசத்தில் இருந்து காரைதீவை சேர்ந்த வேட்பாளர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒன்றாக ஒரேயொரு சுயேச்சை குழுவில் போட்டியிட வேண்டும் என்று ஊர் மக்கள் கூடி ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
காரைதீவின் இருப்பு, இறைமை, பாதுகாப்பு, தனித்துவம், அடையாளம், பாரம்பரியம், கலாசாரம், அபிவிருத்தி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட காரைதீவு மகா சபை இவ்விடயத்தை கையாண்டு வருகின்றது.
இந்நிலையில் காரைதீவு மகா சபையின் நிறைவேற்று குழு உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரைதீவு விபுலானந்தர் மணி மண்டபத்தில் சந்தித்து பேசினார். அப்போதே காரைதீவு மக்கள் தெரிவு செய்து தருகின்ற வேட்பாளர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட ஆவன செய்வார் என்று தெரிவித்ததுடன் இத்தேர்தலில் காரைதீவில் இருந்து அதிக உறுப்பினர்களை பெறுவதற்கு வாய்ப்பாக சுயேச்சை குழு ஒன்றும் போட்டியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
காரைதீவு மகா சபைக்கு அழுத்தம் கொடுக்கின்ற வகையில் இவ்வாறு பேசிய கோடீஸ்வரன் மகா சபை நிறைவேற்று குழு உறுப்பினர்களின் பதிலை பெற கூட தாமதித்து நிற்காமல் உடனடியாக வெளியேறி சென்று விட்டார் என்று சுட்டிக் காட்டி உள்ள செல்லையா இராசையா இது தொடர்பாக இவரின் காரைதீவு இல்லத்தில் நேற்று சனிக்கிழமை நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு பேசினார். இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
காரைதீவின் இருப்பு, இறைமை, பாதுகாப்பு, தனித்துவம், அடையாளம், பாரம்பரியம், கலாசாரம், அபிவிருத்தி ஆகியவற்றை உறுதிப்படுத்த எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு காரைதீவில் இருந்து காரைதீவை சேர்ந்த வேட்பாளர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒன்றாக ஒரேயொரு சுயேச்சை குழுவில் போட்டியிட வேண்டும் என்று ஊர் மக்கள் கூடி ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இத்தீர்மானத்துக்கு புறம்பாக வேறு கட்சிகளும் சரி, சுயேச்சை குழுக்களும் சரி போட்டியிட கூடாது என்று கண்டிப்பாக முடிவெடுத்து உள்ளதுடன் மீறி செயற்படுபவர்கள் துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டு விலக்கி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவித்து உள்ளனர். காரைதீவில் உள்ள அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஊரின் ஏகோபித்த தீர்மானத்துக்கு கட்டுப்பட்டு கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒரேயொரு சுயேச்சை குழுவில் போட்டியிட ஆயத்தமாகி உள்ள தறுவாயில் சிவ பூசையில் கரடி புகுந்த சம்பவமே நடந்து உள்ளது.
எமது ஊரின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்காமல், அவருடைய கட்சி நலனை மாத்திரம் முன்னிறுத்தியவராக கோடீஸ்வரன் வந்து பேசி சென்று உள்ளார். ஆனால் எமக்கு எஜமானர்கள் ஊர் மக்கள் மாத்திரமே ஆவர். எனவே கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி, பரமேஸ்வரனாக இருந்தாலும் சரி, சனீஸ்வரனாக இருந்தாலும் சரி, கேடீஸ்வரனாக இருந்தாலும் சரி ஊர் தீர்மானத்துக்கு எதிராக யாரும் செயற்படுவதையோ, செயற்பட முயற்சிப்பதையோ நாம் அனுமதிக்க முடியாது.
வீரமும், விவேகமும் நிறைந்த காரைதீவு மண்ணில் இருந்து அரசியல் தலைமைத்துவம் ஒன்று எழுச்சி பெற கூடாது என்கிற எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருக்கு இருக்க கூடும். மேலும் தேர்தல் நோக்கத்துக்காக தற்போது காரைதீவு மண்ணுக்கு காலடி எடுத்து வைத்துள்ள இவர் பாராளுமன்ற உறுப்பினராக எமது மண்ணுக்கு ஆற்றிய சேவை என்று எதுவுமே கிடையாது என்பதையும் இவ்விடத்தில் சொல்லி வைக்க விரும்புகின்றேன். மட்டும் அல்லாமல் காரைதீவு பிரதேச மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும், இம்மக்களின் அபிப்பிராயம், ஆலோசனை, கருத்து ஆகியவற்றை செவிமடுக்காமலும் காரைதீவை பொத்துவில் தொகுதியில் இருந்து பிரித்து சம்மாந்துறை தொகுதியுடன் இணைக்க மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு சிபாரிசு செய்த இவருக்கும், இவர் சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இப்போது காரைதீவு மக்களுக்கு அழுத்தம் கொடுக்கவோ, ஆலோசனை கூறவோ, வழிகாட்டவோ எந்தவொரு அருகதையும் கிடையாது என்பதையும் நான் பிரகடனப்படுத்துகின்றேன். மேலும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களை காலம் காலமாக தமிழரசு கட்சியே பிரதிநிதித்துவ அரசியலில் பின்னடைய செய்து உள்ளது, இதனால் நாம் எமது பழம்பெரும் தமிழ் கிராமங்களை இழந்து நிற்கின்றோம் என்பது கசப்பான வரலாற்று உண்மை ஆகும், இவை தொடர்பாக நான் பகிரங்க விவாதம் செய்யவும் தயாராக உள்ளேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனம் அடைய செய்ய சதி நடக்கின்றது, தமிழ் தேசிய கூட்டமைப்பு பலவீனம் அடைகின்ற பட்சத்தில் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தமிழர் தரப்பு முயற்சிகள் பின்னடைவு அடைந்து விடும், எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனம் அடைய வைப்பதற்கு உடந்தையாக செயற்படுகின்ற மோசமான முன்னுதாரணமாக வரலாற்றில் காரைதீவு மண் மாற கூடாது போன்ற பசப்பு வார்த்தைகளை இனியும் நம்ப எமது மக்கள் தயார் இல்லை.
இதே நேரம் காரைதீவு மகா சபையை ஆரம்பித்த முன்னோடிகளில் ஒருவரும், காரைதீவின் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஆறுமுகம் பூபாலரட்ணம் எமக்கு கருத்து கூறுகையில் கோடீஸ்வரன் எம். பியின் ஆலோசனையை காரைதீவு மகா சபை நிராகரித்து விட்டது, ஏற்கனவே ஊர் மக்கள் கூடி எடுத்த ஏகோபித்த தீர்மானத்துக்கு அமைய காரைதீவில் இருந்து கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரேயொரு சுயேச்சை குழு மாத்திரமே போட்டியிடும், இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை காரைதீவு மகா சபை மேற்கொண்டு வருகின்றது என்று கூறினார்.