நான் தெரிவிக்கும் கருத்தை விமர்சிக்கும் தகுதி கட்சியின் தலைமையைத் தவிர, வேறு யாருக்கும் கிடையாது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நேற்று நடைபெற்ற ஒரு சமூக சேவை சங்கத்தின் மண்டல மாநாட்டில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மருத்துவமனைக்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை திமுகவினர் தடுத்தது வருத்தத்துக்கு உரியது. இந்த சம்பவத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருப்பது நல்ல முன்மாதிரியான நடவடிக்கை. எனவே, இனிமேல் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இது தொடர்பான விவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தது குறித்து பல்வேறு விவாதங் களை செய்வதால், மறைந்த ஜெயலலிதா திரும்பி வரப்போவது இல்லை என்கிற அந்த வருத்தத்தில்தான், ஜெயலலிதா மறைவு குறித்து வெள்ளை அறிக்கை தேவையில்லை என்ற கருத்தை தெரிவித் திருந்தேன். நான் சொல்வதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கருத்தாகத்தான் இருக்கும். அந்தக் கருத்து கட்சியின் கருத்தா இல்லையா என்று கருத்து தெரிவிக்கும், விமர்சிக்கும் அதிகாரம், தகுதி கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் போன்றவர்களுக்குத்தான் இருக்கிறது. வேறு யாருக்கும் கிடையாது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை, உடல்நலக் குறைவால் மறைந்த முன்னாள் முதல்வரின் இறப் புடன் தொடர்புபடுத்தக் கூடாது. அப்படி தொடர்புபடுத்திப் பேசுவோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.