கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1கோடி பரிசளிக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரிகளின் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.-வுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார். இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் குந்தன் சந்திரவாத் என்பவர், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும் என்றார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து குந்தன் சந்திரவாத் கூறுகையில், நான் தெரிவித்தது என்னுடைய சொந்த கருத்து என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளது. அவர்கள் மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை” என்றார்.