திருகோணமலை ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் நிலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த அறிக்கையிலேயே குறித்த அமைப்பு மேற்குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, “திருகோணமலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மண்டபத்திற்குள் சில பௌத்த பிக்குக்கள் உள்நுழைந்து விகாரை கட்டுவதற்கான அனுமதி வேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர், மட்டக்களப்பில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் நில நிலைமைகளை ஆராயச் சென்ற சர்வமத தலைவர்களையும் சிவில் சமூக அமைப்பினரையும் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சிறை பிடித்து தடுத்து வைத்திருந்தனர்.
கடந்த சில நாட்களில் கிழக்கில் நடைபெற்ற இரு வேறு நிகழ்வுகளை நாம் செய்தியாக கடந்து செல்ல மெல்ல மெல்ல பழக்கப்படுத்த படுகிறோம்.
தொடர்ச்சியாக தொல்லியல் அடையாளமுள்ள இடங்களாக இனங்காணப்பட்ட தமிழர் வழிபாட்டிடங்கள் மற்றும் வாழ்விடங்கள் மீதான பௌத்த ஆக்கிரமிப்பு நம்மை திட்டமிட்டு விரக்தி மனநிலைக்குள் தள்ளி ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியாத மனநிலைக்கு இட்டுச் செல்கிறது.
பௌத்த மதகுருக்கள் உள்நுளைந்ததும் அத்தனை பேரும் எழுந்து மரியாதை செய்கின்றனர். இந்த நிலைமை ஆக்கிரமிப்பின் வீரியத்தை வெளியே சொல்ல போதுமானதாகும்.
பண்பாட்டு இடங்கள், பொருளாதார கட்டுமானங்கள், வாழ்விடங்கள் என சிங்களம் தனது ஆக்கிரமிப்பை வலுவான மத பின்னணியில் முறைசார் அளவீடுகளின் அடிப்படையில் செயற்படுத்தி வருகிறது. தமிழ்த்தேசிய அரசியல் இந்த ஆக்கிரமிப்புகளிற்கான மறுதலிப்பு நிகழ்ச்சிகளினுள்ளே திட்டமிடப்பட்டு மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது.
இனமாக திரட்சி கொள்ளும் வகையிலான தயார்படுத்தலை தமிழர் தரப்பு கைக்கொண்டு விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு சிங்களம் விரித்த வலைக்குள் நாம் சிக்கியிருக்கிறோம்.
ஆக்கிரமிப்பு ஊடாக இன முறுகல் ஒன்றை ஏற்படுத்தி வாக்கு வங்கிகளை சரிசெய்து கொள்ள சிங்கள பெருந்தேசிய கட்சிகள் கங்கணம் கட்டி நிற்கின்றன.
தமிழ்த்தேசிய தரப்பு தனது இலக்கை அடைவதற்கான வழிவகைகளை முறையாக கண்டு பிடித்து அதன்படி பயணப்பட வேண்டிய நேரம் இதுவாகும். ஆக்கிரமிப்புக்களுக்கு பதிலிறுக்கும் சம காலத்தில் நமக்கான எதிர்கால வேலைத்திட்டங்களிலும் கவனக் குவிப்பை செய்வதாக வேண்டும்.
சிவில் சமூகங்கள், அரசியல் தரப்புக்கள், புத்தி ஜீவிகள் மற்றும் பொதுமக்கள் திரட்சியாக ஆக்கிரமிப்பிற்கு எதிர்வினை ஆற்ற ஒருங்கிணைய வேண்டும். பௌத்த பேரினவாத நிகழ்ச்சிகள் தமிழர் தாயக பிரதேசங்களை சிதைக்கும் வேலைத்திட்டங்களை அவர்கள் நிறுத்தும் வரை நமது எதிர்வினைகள் பலமிக்கதாக ஒருங்கிணைக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.