மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் மக்கள் கூட்டம் இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் என்னை தலைமையேற்க தெரிவு செய்தமைக்காக முதலில் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாது என்மீதான நம்பிக்கையை வைத்து என்னை தெரிவுசெய்தமைக்கு ஏற்றால் போல் தேசிய மக்கள் சக்திக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் எப்போதும் நன்றியுடையவனாகவும், நம்பிக்கையை காப்பாற்றும் நபராகவும் இருப்பேன் என உறுதிமொழி வழங்குகின்றேன்.
இந்த ஜனாதிபதி தேர்தல் முகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் உள்ளது. இதில் இரண்டு தெரிவுகள் மக்களுக்கு உள்ளது. ஒன்று பழைய மோசமான ஊழல்வாத ஆட்சியை கொண்டு செல்லும் வழி. மற்றையது மக்கள் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக வாழக்கூடிய வழியும் உள்ளது.
காலாவதியான மோசமான ஆட்சி வேண்டுமா அல்லது மக்கள் நம்பிக்கையுடன் கட்டியெழுப்பகூடிய வழி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டிய முக்கிய சந்தியில் உள்ளீர்கள்.
இந்த நாட்டினை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. முதலில் மோசமான அரசியலை இல்லாது செய்ய வேண்டும். நாட்டினை கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட தொழிலாளர், அதனை ஏற்றுகொள்ளும் மக்கள் கூட்டத்தை கொண்டே முன்னெடுக்க வேண்டும். இதில் முதல் கட்டம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், இந்த நாட்டில் அரசியல் ஊழல், மோசடி, கப்பம், அடக்குமுறை என்பவற்றை கையாளும் நபர்களின் கைகளில் இன்று அரசியல் அதிகாரங்கள் உள்ளது. இவற்றை மாற்றியமைக்க வேண்டும்.
இந்த நாசகார ஊழல் மிக்க அரசியலுக்கு அப்பால் தூய்மையான உண்மையான மக்கள் நல அரசியலை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை இதில் நாம் முன்வைக்கின்றோம். இந்த நாட்டின் வளங்கள் அனைத்துமே கைப்பற்றப்பட்டுள்ளது.
சமூகமாக இன்று நாட்டு பிளவுபட்டுள்ளது. சமூகங்களை பிரித்து வைத்துள்ளனர். பிளவுபட்ட சமூகத்தை கொண்டு நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. ஜாதி, மதம், இன பிளவுகளில் இருந்து விடுபட்டு ஐக்கிய நாட்டினை உருவாக்கும் சூழலை நாம் உருவாக்கிக்கொடுப்போம்.
எமது எதிர்கால சந்ததியினருக்கான உறுதியான நாட்டினையும் எமது இளம் சமுதாயத்தினருக்கு நிருவாகத்தை கையில் கொடுக்க வேண்டும். எமது நாட்டில் அப்பாவி மக்கள் வேதனையுடன், வருத்ததுடனும் வாழ்கின்றனர். ஆனால் இந்த வேதனைகளால் மாத்திரம் மாற்றத்தை உருவாக்கிவிட முடியாது. அதனையும் தாண்டி உறுதியான மன நிலையுடன் மக்கள் கூட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்கான நம்பிக்கையை இன்று காலிமுகத்திடலில் கூடியுள்ள மக்கள் கூட்டத்தின் மூலமாக எமக்கு கூறியுள்ளனர்.
இதுவரை காலமாக ஏனைய கட்சிகளை ஆதரித்த மக்கள் அனைருக்கும் நாம் இப்போது அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் எம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிப்போம். போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம்.
அதற்கான இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றினைவோம். இனியும் மக்கள் மௌனிகளாக இருந்தால் இந்த நாட்டின் பாதையை மாற்றியமைக்க முடியாது. ஆகவே மக்களுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான சந்தர்ப்பம் இது. இதில் மக்கள் சகலரும் சரியான தீர்மானத்தை எடுத்து எம்முடன் கைகோர்க்க அலைப்புவிடுவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.