எல்லை நிர்ணயம் குறித்த மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கும்வரை உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டரீதியான இயலுமை இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலான வட்டாரங்கள் அமைக்கப்படாத நிலையில் தேர்தலொன்றை நடத்துவது நல்லாட்சி அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணைக்கு விரோதமானது என்றும் கூறினார்.
23/2 நிலையியற்கட்டளையின் கீழ் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உள்ளூராட்சி சபையின் நிர்வாகம் சீரழிந்திருப்பதாகவும், எல்லைநிர்ணய செயற்பாடுகளில் அரசாங்கம் காலத்தை இழுத்தடித்து வருவதாகவும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் பிரதமர் மறுத்தார்.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் அதனை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது விடயத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இவ்வாறான நிலையில் உள்ளூராட்சி சபைகளை ஒத்திவைப்பதற்கோ அல்லது காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்தவித தேவையும் இல்லை.
உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதுடன் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் சட்டத்தின் கீழ் எல்லை நிர்ணய குழுவினால் முன்வைக்கப்பட்ட எல்லை நிர்ணயம் குறித்த பரிந்துரைகளுக்கு பாரிய மக்கள் எதிர்ப்பு ஏற்பட்டது. பொருளாதார நல்லிணக்கத்தை வீழ்த்தும் வகையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இவ்வாறான நிலையிலேயே எல்லை நிர்ணயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக ஆய்வுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதுடன், ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான காலமும் நீடிக்கப்பட்டிருந்தது. எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீடுகளை ஆராயும் குழு வட்டாரங்களின் எல்லைகளை தீர்மானித்து இறுதி முடிவுக்கு வரும். இக்குழுவின் இறுதி முடிவு கிடைக்கப்பெற்றதும் உள்ளூராட்சி சபைகளுக்கான திகதியைத் தீர்மானிக்க முடியும். இந்த அறிக்கை கிடைக்க முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டரீதியாக எந்த இயலுமையும் இல்லை என்றார்.