புலி ஏன் பதுங்குகிறது?
யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியை முன்னெடுக்க வேண்டாம் என எந்தவொரு கருத்துக்களையும் தாம் வெளியிடவில்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
எனினும் கடந்த காலங்களை விட தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ளதால் பொறுமை காக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நல்லெண்ண நடவடிக்கையாக தமிழ் மக்கள் பேரவையினர் பொது அமைப்புக்களைச் சேர்ந்தோர் மற்றும் தமிழரசுக் கட்சியினர் பங்கேற்ற சந்திப்பு ஒன்று சில தினங்களுக்கு முன்னர் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் அக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்ட கிளைத் தலைவருமான சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவளிப்பதில்லை என தமிழரசுக் கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டதா? என அக்கட்சி சார்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிறிதரன், எழுக தமிழ் பேரணியை எதிர்ப்பதாக தாம் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டதுடன், இப்பேரணியை நடத்த வேண்டாம் என்றோ. அதனால் பிரச்சினை என்றோ கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த பேரணியில் வலியுறுத்தப்படும் வடயங்களையே தமிழ் மக்கள் சார்பில் தாமும் வலியுறுத்தி வருவதாக சிவஞானம் சிறிதரன் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது அரசியல் அமைப்பு திருத்தத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அதில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் சில விடயங்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களைப் போல எதேச்சாதிகாரமாக இல்லாமல் தமிழர் தரப்புக்களின் கருத்துக்களும் அரசியலமைப்பு மறுசீரமைப்பில் உள்வாங்கப்பட்டு வருகின்றன என சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார்.
அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு உறுதி செய்யப்பட்டு தமிழர்களுக்குச் சாதகமான விடயங்கள் உள்ளடக்கப்படுமாயின், அதனை நாடாளுமன்றில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதால் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செயற்படவேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஒரு போராட்டத்தை நடத்தி தெற்கில் ஒரு எதிர்ப்பு நிலையை உருவாக்கிவிடக் கூடாது எனவும் அதன்மூலம் உருவாகிவரும் சாதகமான நிலையைக் குழப்பிவிடக் கூடாது என்பதே எமது நோக்கம் எனவும் சிறீதரன் தெரிவித்தார்.
ஏதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் தமிழ் மக்களுக்குச் சார்பான ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்ட சிறிதரன், அவ்வாறு கிடைக்காவிட்டால் மக்களுடன் இணைந்து நாங்களும் வீதியில் இறங்கிப் போராடுவோம் எனவும் குறிப்பிட்டார்.
அதுவரை பொறுமை காப்போம் என்பதே தற்போதைய தங்களது நிலைப்பாடு எனவும் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவை சார்பில் மருத்துவர்களான லக்ஸ்மன், சிவன்சுதன், பாலமுருகன், ஜனார்த்தனர் ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடன் அருட் தந்தை ரவிச்சந்திரன், யாழ்.பல்கழலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் சரவணபவன் பேராசிரியர் சிவநாதன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.