கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. கரோனா தொடர்பாக பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த அமிதாப் பச்சனுக்கு நேற்று (ஜூலை 11) தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார் அமிதாப்.
அவர் தெரிவித்த சில மணித்துளிகளில், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையும் அவருடைய ட்விட்டர் பதிவிலேயே தெரிவித்தார். அரசியல் கட்சிப் பிரபலங்கள், முன்னணி நடிகர்கள், தொழில்துறை பிரபலங்கள் எனப் பலரும் அமிதாப் பச்சன் – அபிஷேக் பச்சன் இருவரும் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, அமிதாப் பச்சன் – அபிஷேக் பச்சன் இருவருக்கும் கரோனா தொற்று உறுதியானதால் ஒட்டுமொத்தக் குடும்பத்தினருக்கும் முதல் கட்ட கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அனைவருக்குமே நெகட்டிவ் என வந்தது. இன்று (ஜூலை 12) காலை நடைபெற்ற இரண்டாம் கட்ட சோதனையில் ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யாவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறார்கள். அவர்களது நிலை குறித்து மும்பை மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
என் தாயார் உட்பட குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்குக் கரோனா தொற்று இல்லை. உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவர்கள் தீர்மானிக்கும் வரை நானும் என் தந்தையும் மருத்துவமனையிலேயே இருப்போம்.
அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருங்கள். தயவுசெய்து எல்லா விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்”.
இவ்வாறு அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.