அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு தடவைகள் ஜனாதிபதி கலந்துரையாடினார், ஆனாலும் அந்த கலந்துரையாடல்கள் மூலம் நாட்டிற்கு சாதகமான முன்னேற்றம் எட்டப்படவில்லை. வரிகளை குறைக்கும் நிபந்தனையை சர்வதேச நாணயம் நிதியம் மறுத்துள்ளது என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எனவேதான் பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவும் ஏனையவர்களும் மக்களின் தலையில் சுமத்தியுள்ள வரிச் சுமையிலிருந்து விடிவைப் பெற்றுத் தருவோம். சர்வதேச நாணய நிதியத்தின் புதிய உடன்படிக்கையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மத்திய கொழும்பு பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி பல உடன்பாடுகளை எட்டியுள்ளது. தற்போதல்ல எதிர்க்கட்சியில் இருக்கும் போதே தாம் இவ்வாறான உடன்பாடுகளை எட்டியதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
33 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பேன், 6 மாதங்களுக்கு ஒரு தடவை அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பைப் பெற்றுத் தருவேன், நேரடி மற்றும் மறைமுக வரிகளை நீக்குவேன் என அநுர குமார திசாநாயக்க மேடைக்கு மேடை தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து அதிகாரம் இருந்தும் சொன்னதை செய்தபாடில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான முன்னைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு நாட்டை காட்டிக்கொடுத்தது. வெளிநாட்டு கடனை 2033 முதல் செலுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி அதனை 2028 ஆம் ஆண்டு வரை குறைத்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 9 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. முழு நாடும் 220 இலட்சம் மக்களும் தற்போது அழுத்தங்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகியுள்ளனர் என்று சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
இப்படியே தொடர்ந்தால், 2028 இல் கூட நாடு வங்குரோத்து என்றே சொல்ல வேண்டியிருக்கும். சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகும். இவ்வாறு முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் 2033 ஆம் ஆண்டு வரை நியாயமான காலத்தை எம்மால் பெறலாம்.
பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்து, ஏற்றுமதியை ஊக்குவித்து, உற்பத்தித் தொழில்களை அதிகரித்து, மக்களின் வருமானமத்தை அதிகரிக்க வேண்டும். இதுவரை 263,000 நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் வங்குரோத்தடைந்து மூடப்பட்டுள்ளன.
உள்நாட்டு உற்பத்தியில் 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவதால், இத்தரப்பினரை மீண்டும் முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.