வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20யின் இவ்வாண்டுக்கான தலைமைத்துவத்தை தற்போது இந்தியா பெற்றிருக்கிறது. அதிகாரம் மிக்க இந்த அமைப்பு கடந்த வருடம் டிசம்பா் மாதம் முதல் இந்தியாவின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
ஜி 20 நாடுகளின் அமைப்பின் தலைமைப் பொறுப்பு ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் உறுப்பு நாடுகளுக்கிடையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்த ஆண்டு இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.
உலகில் வளா்ச்சியடைந்த முன்னணி 20 நாடுகளின் மிக முக்கிய கூட்டணியாக ஜி 20 கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது.
இந்த அமைப்பில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ் போன்ற 19 நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் அங்கம் வகிக்கின்றன.
உலகிலுள்ள பெரிய வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையில் பொருளாதார ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதே ஜி20 கூட்டமைப்பின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.
ஜி20 கூட்டமைப்பு எதிர்கால உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் செழுமையைப் பாதுகாப்பதில் ஒரு மூலோபாயப் பங்கைக் கொண்டுள்ளதுடன், ஒரு முன்னணி பலதரப்பு தளமாகவும் இயங்கி வருகிறது.
உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதத்தையும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரையும் ஜி20 கூட்டமைப்பு நாடுகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
இந்தியா, ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சமகாலம் சிக்கல்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. பொருளாதார, அரசியல் பிரச்சினைகளால் பல நாடுகளை ஆட்டம் கண்டு வருகின்றன.
ரஷ்ய – உக்ரைன் மோதல்கள், கொவிட்-19 ன் பேரவலம் போன்றவை உலகப் பொருளாதாரத்தை ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. ஜி20 கூட்டமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் முக்கிய பேசு பொருளாக இவையே தொடரவிருக்கின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாக உலகை வாட்டி வதைக்கும் கொரோனா பெரும் தொற்றும், இயற்கை பேரிடா் அனா்த்தங்களும் மற்றும் ரஷ்ய – உக்ரைன் யுத்தம் போன்றவையும் உலகளவில் பலத்த அரசியல், பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன.
இதன் விளைவாக பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் அரசியல், சமூக நெருக்கடிகளை உலகம் தொடர்ந்து சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான நிலையில் ஜி 20 கூட்டமைமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா எப்படி காத்திரமாக நிா்வகிக்கப் போகிறது என்று அனைவரும் எதிா்பார்த்து இருக்கின்றனா்.
பிரச்சினைகளால் பிணைக்கப்பட்டிருக்கும் உலக நாடுகளுக்கிடையில் தீா்வுகளை தேடிக்கொடுத்து, புரிந்துணா்வை ஏற்படுத்தும் செயற்திட்டங்களை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. சா்வதேச ரீதியில் இந்தியா மீதான நம்பிக்கைகள் உருவாகி வருதை அவானிக்கக் கூடியதாக இருக்கிறது.
“ஜி20 கூட்டமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தை சர்வதேச சமூகம் பெரிதும் நம்புகிறது” என்று சா்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்தாா்.
“ஜி 20 அமைப்புக்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் மீது நாங்கள் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளோம். ஏனெனில், ஒருங்கிணைந்து உலக பொருளாதாரத்தை பாதுகாப்பதன் மூலமாக, தங்களது சொந்த நலனையும் உலகநாடுகள் பாதுகாத்துக் கொள்வதற்கு இது ஒரு முக்கியமான நேரமாகும்.”
“இந்தியா நம்மை ஒன்றாக இணைத்து, மிகப்பெரியதொரு உலகளாவிய சேவையை செய்யும் என்று நான் நம்புகிறேன். இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுவதை நாம் நன்றாக அறிந்து வருகிறோம். கொரோனா பரவலின் பின்னா் துரிதப்படுத்தப்பட்ட அதன் செயற்பாடுகள், டிஜிட்டல் மயமாக்கல், அரச மற்றும் தனியார் துறை வளர்ச்சிக்கு செயலூக்கம் தருவதாக பயனுள்ளதாகஅமைந்தது” என்றும் அவா் கூறியுள்ளாா்.
இந்தியா, 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை ஜி 20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் நிலையில், துரிதமான ஆக்கபூா்வமான செயற் திட்டங்களை அது வேண்டி நிற்கிறது.
ஜி20 கூட்டமைப்புக்கான இவ்வாண்டின் சுலோகமாக , ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற சா்வதேசத்தை ஒன்றாக பிணைக்கும் ஒரு கருப்பொருளை தாரக மந்திரமாக இந்தியா அறிவித்து இருக்கிறது.
ஜி-20 அமைப்பின் தலைமைப் பதவிக்கு இந்தியா பொறுப்பேற்றிருப்பதை உறுப்பு நாடுகள் மிகவும் வரவேற்றுள்ளன. அதேபோல, ஸ்திரத்தன்மையின் மீது உலக நாடுகளின் பொருளாதாரத்தை கட்டமைக்கும் இந்தியாவின் சகல நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்குவதாக அதன் உறுப்பு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அறிவித்துள்ளன.
எவ்வாறாயினும், பூகோள ரீதியிலான பிரச்சினைகளுக்கு முன்னுரிமைகளை வடிவமைப்பது முதல், அனைத்து சர்வதேச அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளிலும் உலகளாவிய கட்டமைப்பை வடிவமைப்பதிலும், நாடுகளுக்கிடையிலான முறுகல்களையும், முரண்பாடுகளைக் களைந்து, நல்லுறவை வலுப்படுத்துவதில் இந்தியா முக்கியப் பங்கை வகிக்கும் என்று நம்பப்படுகிறது.
தொற்று நோய்கள், இயற்கை பேரிடா்கள் மட்டுமல்லாது போா்களும், நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளும், முறுகல்களும் இன்றைய உலகை துவம்சம் செய்து வருகின்றன.
போா்கள் மற்றும் மோதல்கள் இந்த பூமிப் பந்தை பிரச்சினைகளில் புரட்டி எடுத்திருக்கின்றன. போா்கள் மற்றும் அனா்த்தங்களின் விளைவாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள மனித அவலங்களும், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தெடா்பான பிரச்சினைகளும் உலகின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளன.
எது எவ்வாறாயிருப்பினும், உலகம் எதிர்பார்க்கும் அளவு, கணிசமான முன்னேற்றங்களை அடையவதில் பெரும் சிரமங்களும், தடைகளும் இருக்கவே செய்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல் விவகாரம் உலகளவில் பாரிய அரசியல், பொருளாதார நெருக்கடிகளையும், அமைதியின்மையையும் தோற்றுவித்துள்ளது. உலக மக்களின் அடிப்படைத் தேவைகள் மீது மிகப்பாரிய இடையூறு இந்த பிரச்சினையால் உருவெடுத்துள்ளது.
இதன் காரணமாக பெரும்பாலான நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த யுத்தம் மிகப்பெரிய மனித அவலத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலகப் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியிருக்கிறது.
நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. உலகளாவிய பொருளாதார விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்திருக்கிறது. உணவு பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்றவற்றில் பாரிய பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது.
உலகையே பாதித்து வரும் இந்த போரின் விளைவுகளிலிருந்து மீள்வதற்கு, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான வரலாற்று ரீதியிலான இணக்கமான உறவுகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இந்தியா பெற்றிருக்கிறது.
ரஷ்ய – உக்ரைன் மோதலுக்கு தீர்வு காணவும், முடிந்தவரை அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதைக்கு வியூகம் வகுக்கவும் இந்தியா தனது நல்லுறவைப் பயன்படுத்தலாம் என்றும் நம்பப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, “இன்றைய சகாப்தம் போராக இருக்கக்கூடாது” என்று இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஜி 20 மாநாட்டின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய செய்தியும் இங்கு நினைவு கூரத்தக்கது.
ஜி20 கூட்டமைப்பு என்பது பாதுகாப்பு தொடா்பான விவகாரங்களைத் தீர்ப்பதற்கான அமைப்பாக இல்லாத போதும், உலக நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் விவகாரங்கள் தொடா்பாக கரிசனை கொள்ளவேண்டிய கட்டாயத் தேவை அந்த அமைப்புக்கு இருக்கிறது.
நாடுகளுக்கிடையிலான முறுகல்களும், பிணக்குகளும், போா்களும் உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளையும், வறிய நாடுகளில் மிகப் பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையோ, மற்றும் இருதரப்பு பேச்சுவாா்த்தைகளோ மோதலை தடுக்க தவறிய நிலையில், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பு ஜி20யின் தலைமைத்துவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
புவியரசியலின் நெருக்கடிகளை நிவா்த்தி செய்துகொண்டு, தனது நாட்டின் அபிவிருத்திகளை இலக்கு வைக்கும் மேம்பாட்டு திட்டங்களையும் இந்தியா தீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரையிலான அதன் மேம்பாட்டுத் திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நகர்ப்புற மேம்பாடு தொடர்பான ஜி20 உச்சி மாநாட்டின் அடையாள நகரமாக இந்தியாவின் அஹமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இது தொடர்பான இலச்சினை, இணையதளம் மற்றும் சமூக நிர்வாகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வெளியீட்டை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆரம்பித்து வைத்துள்ளாா்.
இந்த மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் அடுத்த இரண்டு தசாப்தங்களில் அமெரிக்காவை விட இந்தியா நவீன தொழில் நுட்பத்துடனான நகரமயமாக்கலில் முன்னணி நாடாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன சவால்களுக்கு ஏற்றவாறு நகரங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், நீா் வளத்தைப் பாதுகாத்தல் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம் நகரங்களின் எதிர்காலத்தை கட்டமைத்தல் போன்றவற்றில் இந்தியா தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.
இது தொடா்பான முதலாவது அமா்வு, அகமதாபாத் நகரில் பெப்ரவரி 09 மற்றும் 10 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வா்கள் குறித்த அமா்வுகளில் நகர்ப்புற வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பார்கள் என்று இந்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கூறுகிறது.
ஜூலை மாதம் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் நடைபெறும் அமா்வுகளில் நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டங்கள் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இந்த ஜி20 தலைமைப் பதவியின் மூலம், ஜி20 அல்லாத நாடுகளுடன் யோசனைகள் மற்றும் அபிலாஷைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு சிறந்த தளத்தை இந்தியா ஏனைய நாடுகளுக்கு வழங்கியிருக்கிறது.
கடந்த வியாழன் (12) அன்று தொடங்கிய “வொய்ஸ் ஆஃப் குளோபல் சவுத்” என்ற உச்சிமாநாட்டில் 120 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தியா நடத்திய வொய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் (Voice of Global South Summit) மாநாட்டில் தொலை தொடா்பு மூலம் கலந்து கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், ஜி20 கூட்டமைப்பில் இல்லாத நாடுகளுக்கு தனது கருத்துக்களை வழங்க சந்தா்ப்பம் வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தாா்.
ஜி20 கூட்டமைப்பின் விருந்தினர் நாடுகளாக பல நாடுகளை இந்தியா இணைத்துக் கொண்டதையும் அவா் பாராட்டியுள்ளாா். “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம்” என்ற இந்தியாவின் சா்வதேசிய கருப்பொருளை அதன் செயற்பாடு ஆணித்தரமாக பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.