’ஒழுக்கமான அரசியலே நாட்டுக்குத் தேவை’

பிலியந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ரணில் வில்லத்தரகே,

“நாட்டில் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக குரல் கொடுப்பது நாட்டு மக்கள் உள்ளிட்ட நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையும் ஆகும். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தமையினால் நாம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டதோடு, அதன் ஊடாக பல்வேறு துறைகளிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. நாட்டு மக்கள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகினர். அதை நம்மால் மறக்க முடியாது. 

“நிலைமையை நிர்வகிப்பது சவாலானதாக இருந்ததோடு, இதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த விடயங்களும் ஏற்பாடுகளும் பாராட்டுக்குரியனவாகும்.

“ரணில் விக்ரமசிங்க போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த அரசியல் துறையில் அரிது. அத்தகைய தலைவரின் அறிவும் அனுபவமும் நாட்டை இன்றைய நிலையில் இருந்து மீட்டெடுக்க மிகவும் அவசியமாகும். தலைவராக வேண்டும் என்று விரும்புபவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். 

“நாம் வருவது எதிர்காலத்தை பொறுப்பேற்கவாகும். ஏனைய தலைவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. நாட்டை அழித்த அரசியல் பற்றிய அறிவே அவர்களிடம் இருக்கிறது. நாட்டை நெருக்கடியின் போது மீட்ட விதம் மற்றும் பொருளாதாரம் நிர்வகிக்கப்பட்ட விதம் தொடர்பான அறிவு ரணில் விக்ரமசிங்கவிடமே உள்ளது.

“எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கத்தை அமைக்க முடியுமா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. அது மக்களால் தீர்மானிக்கப்படும். நாம் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, இந்த நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக, தொழில்முனைவுத் திறனை வளர்த்து, வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நடைமுறை ரீதியான திட்டத்துடன் நான் அரசியலில் இறங்கியுள்ளேன்.

“அவ்வாறே, வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தையை இலக்காக கொண்டு படைப்பாற்றல் மிக்க இளைஞர், யுவதிகளை வலுவூட்ட வேண்டும். நம் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை கொண்டு வர, எமது வர்த்தகநாமங்களை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒரு வர்த்தக நாமத்தை எம்மால் அறிமுகப்படுத்த முடியும். 

“டிஜிட்டல் மயமாக்கலுடன், உலக சந்தையில் காணப்படும் எமக்கான இடைவெளிகளை நாம் சரியாகக் கண்டறிந்து, அந்தப் பாதையில் பயணித்தால், இன்னும் ஐந்தாறு வருடங்களில் இந்த நாட்டை மீட்டெடுக்க முடியும். இது டொலர் பற்றாக்குறையை தீர்க்க வழிவகுக்கும். 

“அனைத்து மட்டங்களிலும் உள்ள தொழில்முனைவோரை ஒரே இடத்தில் ஒன்றிணைத்து, இறுதியாக நாட்டிற்கு அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படுவதன் மூலம், நிலையான பொருளாதாரத்தின் உரிமையாளர்களாக நாம் மாற முடியும். அந்த இடத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்வதற்கான அனுபவம் எம்மிடம் உள்ளது.

“நேர்மையான அரசியலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதாவது நேர்மையை அடிப்படையாகக் கொண்ட அரசியல். தற்போதைய அரசியல் சூழலில் இது மிகவும் கடினமாகும். அதேசமயம், நேர்மையான நோக்கத்துடன் அரசியலுக்கு வருவது என்பது எளிதான விடயம் அல்ல. ஆனால் நோக்கம் நல்லதாக இருந்தால், இவை ஒரு பிரச்சினை அல்ல. உண்மை எப்போதோ ஒருநாள் வெல்லும். 

“மக்களும் எப்போதும் நேர்மையாகவே செயற்படுவதில்லை. எனக்கு நல்லது நடக்கின்றது என்றால் யாருக்கு என்ன நடந்தாலும் என்ன எனும் மன நிலையில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு குழுவினரால் தான் நாம் இந்த இடத்திற்கு வீழ்ந்துள்ளோம். ஆனால் மக்களின் நிலைப்பாடுகள் மாறி சரியான பாதையில் செல்கிறது. 

“இந்த மனித வாழ்வில் நாம் தவறான செயல்களைச் செய்யாமல் மனச்சாட்சிப்படி செயற்பட வேண்டும். இதன் மூலமே வெற்றி எம்மைப் பின்தொடர்ந்து வரும்” என்றார்.