அடுத்த வாரமே செல்பேசியில் அழைத்த ஒரு குரல் தன்னிடம் பர்ஸ் இருப்பதாகக் கூறியது.
பர்ஸில் அது இருப்பதாகச் சொன்ன விவரத்தில் பணம் நீங்கலாக யாவும் இருந்தன. யாரென்று விசாரித்தேன். தன் பெயர் புருஷோத்தமன் என்றும், குப்பை ஆட்டோ ஓட்டுவதாகவும் சொன்னார். நான் பர்ஸைத் தவறவிட்ட இடம் செங்கல்பட்டு. புருஷோத்தமன் அதைக் கண்டெடுத்த இடம் கோடம்பாக்கம் குப்பைத்தொட்டி.
யாரோ பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பர்ஸை வீசியிருக்க வேண்டும். “நன்றி தம்பி, உங்களைச் சந்தித்து வாங்கிக்கொள்கிறேன்” என்றேன். அடுத்தடுத்த வேலை நெருக்கடியில் இது தள்ளிப்போனது. இதற்குள் பல முறை புருஷோத்தமனிடமிருந்து அக்கறையான அழைப்புகள் வந்துவிட்டன. “அண்ணா உங்க உடமைண்ணா. என்கிட்ட இருக்கக் கூடாது!”
இன்று புருஷோத்தமனைச் சந்தித்தேன். ‘அரசியல் பழகு’ நூலையும் சிறிய பணப் பரிசையும் அளித்தேன். என்ன படித்திருக்கிறார் என்று கேட்டேன். வீட்டுச் சூழலால் படிப்பை நிறுத்திவிட்டதாகச் சொன்னார். “உங்கள் நேர்மைக்கு என் வணக்கங்கள்” என்றேன். சந்தோஷமாகக் கையைப் பிடித்துக்கொண்டார்.
உண்மையில் அந்த பர்ஸால் இனி எந்தப் பயனும் எனக்கு இல்லை. ஆனால், இப்படிப்பட்டவரைச் சந்திக்க விரும்பினேன். தொலைந்து திரும்புவதன் வழி அந்த பர்ஸ் ஓர் அற்புதமான மனிதரைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறது!