’கடல் வளம் சுரண்டப்படும் நிலையில் மாற்றம்’

பூநகரி – கௌதாரிமுனை பகுதியில். சீன நிறுவனமொன்றால் முன்னெடுக்கப்பட்டு வரும் அட்டை வளர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் குறித்த பகுதிக்கு, இன்று (28) சென்றிருந்தனர்.

இதன்போது, மக்களின் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து முடிவு எடுப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களிடம் தெரிவித்தனர்.

இது தொடர்பில், தொடர்ந்துரைத்த சுமந்திரன், குறித்த அமைவிடம் மக்களுக்கு தெரியாத வகையில் மறைவிடமாக அமைக்கப்பட்டுள்ளதென்றார்.

குறித்த நிறுவனத்தினர், அரியாலையில் அவர்களது அலுவலகத்தை வைத்துள்ளனர் என்று தெரிவித்த அவர், கடல் தொழில் அமைச்சால், இந்த நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சட்டவிரோதமாக இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு, ஒருவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு அப்பால், இந்த நாட்டில், சீன ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சியாகவே, இந்தச் செயற்பாட்டை தாங்கள் பார்ப்பதாகவும், சுமந்திரன் எம்.பி கூறினார்.

நேற்றைய தினம் குடத்தனையில் உள்ள எனது வீட்டுக்கு சென்று திரும்புகின்றபோது வீதி அபிவிருத்தி பணிகளில் சீனர்கள் நின்றார்கள். நான் படம் எடுத்து வைத்துள்ளேன். வீதி வேலை செய்வதற்கு தொழிலாளிகள்கூட எங்கள் ஊரில் எடுக்காமல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து உபயோகிக்கின்றார்கள்.

‘வெளி மாவட்டங்களிலிருந்து ஆட்களை கொண்டுவந்து தமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தார்கள். இப்பொழுது வெளிநாடுகளிலிருந்து இதற்கென்று ஆட்கள் வருவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பின்னணிகளை வெகு விரைவிலே நாங்கள் வெளிப்படுத்துவோம்’ என்றும், அவர் தெரிவித்தார்.