இதொடர்பில் அமைச்சு, நேற்று (19) வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமை குறித்த தவறான குறிப்புக்கள், பெண் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டினரைத் துன்புறுத்துதல் தொடர்பான தவறான தகவல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனவே, நாட்டில் நிலவும் உண்மைகளை கனேடிய அதிகாரிகளுக்கு பின்வருமாறு தெரிவிப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது:
கோவிட்-19 தொடர்பான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அனைத்து பொதுச் சேவை, நிறுவன, வணிக மற்றும் கல்விச் செயற்பாடுகள் இடையூறுகளின்றி சாதாரணமாக செயற்படும் வகையில் தற்போது இயல்பு நிலையில் உள்ளது.
உலகளவில் பயணத்தை படிப்படியாக இயல்பாக்குவதன் மூலம் கனடா மற்றும் ஏனைய இடங்களில் இருந்து இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்வதனை இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவை அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளாகும் அதே வேளை, அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் செயற்பாடுகளின் முக்கிய பகுதியாகக் கருதப்படுகின்றது.
அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பொதுமக்களுக்கு எல்லா நேரத்திலும் தொடர்ந்தும் கிடைப்பதையும், போதுமான அளவு உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதையும் உறுதி செய்வதற்கு அதிகமான முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்தமட்டில், இலங்கை அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக குறைந்தபட்ச இராணுவப் பிரசன்னத்தைப் பேணி வருகின்றது.
நாடளாவிய ரீதியில் அனைத்து பிரதேசங்களிலும் சுற்றுலா சார்ந்த பொலிஸார் உட்பட பொலிஸாரின் பிரசன்னத்தைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் பெண் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகள் இலகுவாக அணுகிக் கொள்ளும் வகையில், சுற்றுலா சார்ந்த பொலிஸ் பிராந்தியப் பிரிவுகள், உள்ளூர் பொலிஸ் மற்றும் மருத்துவமனைகள் போன்ற ஏனைய அவசரகாலப் பிரிவுகளின் அவசரத் தொடர்பு இலக்கங்கள் இணையவழியில் காணப்படுகின்றன.
சுற்றுலாப் பயணிகள் அல்லது வெளிநாட்டவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் அல்லது வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அரிதானதாகக் காணப்படுகின்றன என்று வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.