அண்மையிலே கனடாவில் இடம்பெற்ற ஒரு தமிழர் அமைப்பொன்றின் 25 வருட நினைவுக் கொண்டாட்டத்திற்கான பிரதம விருந்தினராக தமிழர்களின் தற்போதைய தலைவராகத் தற்போது பார்க்கப்படும் உயர்நீதமன்ற நீதியரசர் விக்னேஸ்வரனே அழைக்கப்படவிருந்தார்.
இதற்கான அழைப்பிதல் மேற்படி அமைப்பின் அனுமதி பெற்று விழாக்குழு இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்ட இருவரால் கையெழுத்திடப்பட்டு வட மாகாண முதல்வரிடம் நேரடியாகக் கையளிப்பதற்கான சமூகஞ்சார்ந்த தலைவர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதும் இதனையறிந்த மேற்படி அமைப்பின் இயக்குனர் ஒருவர் மேற்படி உத்தியோகபூர்வ அழைப்பிதலை செல்ல விடாமல் தடுத்ததோடு, அதனை மீளப் பெற்றுமிருந்தார். இது சர்வாதிகாரப் போக்குதன்மையான செயற்பாடு என்பதால்,
மேற்படி அமைப்பின் இயக்குனர் சபையால் நியமிக்கப்பட்ட விழாக்குழுவின் இரண்டு இணைத்தலைவர்களும் தங்களது பதவிகளை இராஜினாமாச் செய்ததோடு இந்த விவகாரத்தை மேற்படி அமைப்பின் அப்போதைய தலைவரிற்கும் தெரிவித்துமிருந்தனர்.
இருந்தபோதும் எதற்காக இவ்வளவு சாதுரியமாக உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த வடக்கு முதல்வர் தடுக்கப்பட்டார் என்பது குறித்ததான செய்திகளை எந்தவொரு இயக்குனரோ அல்லது அந்த அமைப்பின் தலைவரே கேள்வியெழுப்பவில்லை என்பது கவலையளிக்கிற ஒரு விவகாரமாகப் பார்க்ப்படுகின்றது.
நல்லிணக்கமாக இனங்கள் வாழவேண்டும் என்ற அடிப்படையிலான செயற்பாடுகளிற்கான ஆரம்பப்புள்ளியாக இவ்வாறாக முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் அமையும் என்பதோடு, புலம்பெயர்ந்த தமிழர்களிற்கும் தங்களது அமைப்புக்கள் குறித்த அக்கறையை ஏற்படுத்தும் என்பதுமே உண்மையாக இருந்த போதும்,
இவ்வாறாக கபடத்தனமாக முதலமைச்சர் வருகை எவ்வாறு தவிர்க்கப்பட்டது என்பதை அந்த அமைப்பிற்கு அப்போது தலைவராக இருந்த பிரமுகர் தற்போதைய இயக்குனர்களிடம் விபரிக்க வேண்டிய தேவையை இது ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மேற்படி விழாவிற்கு வந்த பாடகியும் ஈழத்தமிழர்களிற்கான குரலாக எந்த உலக மேடையையும் பாவிக்கும் மாயா, அவர் பேசுவதற்கு முன்பாகவே எழுந்து தனது அறைக்கு செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்த போதும்,
அவரது பாதுகாப்புக்கு நின்றவர்களும், அவரது நிகழ்ச்சி நிரலிற்குப் பொறுப்பாக நின்றவரும் இன்னமும் ஒரு கொஞ்சநேரத்தில் நீங்கள் பேசி விட்டுச் செல்லலாம் என்று குறிப்பிட்டதாகவும்,
அதேபோன்று பாடகி மாயாவை மேடையில் அறிமுகப்படுத்தவென அழைக்கப்பட்ட நடிகர் மாதவன் அவரை அறிமுகப்படுத்த வேண்டிய தினம் அரங்கிற்கே வரவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.
சுமார் 5 லட்சம் டொலர்கள் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்த நிகழ்வின் “ஆய்வு செய்யப்பட்ட” வரவு-செலவு அறிக்கையை பெறுவதற்காகவும், எதற்காக இந்தப் பணத்தில் சுமார் 4 லட்சம் டொலர்களையாவது போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு செலவு செய்திருக்கக் கூடாது என்பதையும் பலரும் கேள்விகளாகக் கொண்டுள்ளனர்.
இலங்கைப் பணத்தில் 4 லட்சம் டொலர்கள் என்பது 5 கோடி ரூபாய்களாகும். இதனால் சுமார் 5,000 குடும்பங்கள் நிறைவாகப் பலணடைந்திருக்க முடியும். அப்பம் உண்டவனிற்கே அப்பத்தின் அருமை தெரியும். அப்பம் எறிந்தவனிற்கு அப்பத்தின் அருமை எவ்வாறு புரியும் என்பதே இன்றைய கேள்வியாகும்.