(எஸ். ஹமீத்)
தன்னிடம் ஆன்மீக சக்தி நிறைந்திருப்பதாகச் சொல்லி சாத்திரம் பார்ப்பதில் ஈடுபட்டுப் பல பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய இலங்கையையைச் சேர்ந்த பாஸ்கர் முனியப்பா என்பவரைக் கனேடிய பொலிஸார் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளனர்.
சாத்திரம் பார்ப்பதாகச் சொல்லி பாலியல் 2014ம் ஆண்டு இரு பெண்களை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டை நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது 32 வயதான முனியப்பா ஏற்றுக் கொண்டுள்ளார்.
தன்னிடம் சேவைக்காக வருகை தருவோரின் உடல்களில் தேசிக்காய்த் துண்டங்களை வைத்துத் தேய்த்து அவர்களை இம்சை செய்ததை முனியப்பா ஏற்றுக் கொண்டுள்ளதாக அவரது ஒப்புதல் வாக்குமூலத்தை வாசித்த கிரௌன் வழக்கறிஞர் பவுல் சிம்பொனினி (Paul Zambonini) தெரிவித்துள்ளார்.
முன்னர் கைது செய்யப்பட்டிருந்த முனியப்பாவை விளக்க மறியலில் வைக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும் கடந்த பெப்ரவரி மாதம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் கனேடிய பொலிஸாருக்கு அறிவிக்காமல் தனது இருப்பிடத்தை மாற்றியிருந்தார். இதனால் அவரது பிணை நிராகரிக்கப்பட்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கான தண்டனை பற்றி அறிவிக்கப்படவுள்ளது.
எதிர்காலம் பற்றித் தன்னால் தெளிவாகக் கணிக்க முடியுமென்றும் தான் விரைவில் நாடு கடத்தப் போவதைத் தன்னால் அறிந்து கொள்ள முடிகிறதென்றும் ஆகவே மீண்டும் இலங்கை வர வாய்ப்புகள் உள்ளதாகவும் முனியப்பா தெரிவித்துள்ளார்.
பாஸ்கர் முனியப்பா இலங்கை வந்தால் ஒருவேளை தேசிக்காய்களின் விலை அதிகரிக்குமா, என்னவோ!