இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் விஸ்வநாத், பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி, பாஜகஎம்.பி. தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் கர்நாடகாவில் படுக்கைகள் கிடைக்காமல் தவிப்பதற்கும், இறப்பு சதவிகிதம் அதிகரித்ததற்கும் அரசே காரணம் என விமர்சித்தனர்.வேறு சில பாஜக மூத்த தலைவர்களும் எடியூரப்பாவின் முதுமையை சுட்டிக்காட்டி அவரால் கரோனாவுக்கு எதிராக வீரியமாக செயல்பட முடியவில்லை என தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயண் பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷை நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதேபோல கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை டெல்லிக்கு சென்று சந்தித்தார். இதனிடையே மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனால் முதல்வர் பதவியில்இருந்து எடியூரப்பா நீக்கப்படுவாரா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, புதியதாக இளமையும் அனுபவமும் வாய்ந்த ஒருவரை முதல்வராக்கவும் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எடியூரப்பாவை மாற்றினால் அவருக்கு ஆளுநர் பதவி தருவதுடன், அவரது மகள் விஜயேந்திராவுக்கு துணை முதல்வர் பதவி தருவதாகவும் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.