உலக அளவில் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 195 நாடுகளுக்கும் மேல் கரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் மெல்லப் பரவி வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் மாநில அரசுகளும் மத்திய அரசும் தீவிரமாகச் செயல்பட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் பாதிக்கப்படக்கூடியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மக்கள் கூடுவதைக் குறைக்கும் வகையில் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது மத்திய அரசு. திரையரங்குகள், நீச்சல் குளம், அருங்காட்சிகயங்கள் ஆகியவற்றையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை விட்டுள்ளனர்.
ஆனால் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் மத்திய அரசு இன்னும் வேகத்துடன் செயல்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில், “கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு வேகமான, ஆவேசமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டியது அவசியம். ஆனால், கரோனா வைரஸைத் தடுக்க வேகமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க முடியாமல் போனதற்கு மிகப்பெரிய விலையை நமது தேசம் அளிக்க உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 12-ம் தேதி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கரோனா வைரஸ் ஆழ்ந்த தீவிரமான அச்சுறுத்தலை மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் அளிக்கக்கூடியது. ஆனால், இந்த அச்சுறுத்தலை மத்திய அரசு தீவிரமாக எடுக்கவில்லை என்றே எனக்குப் படுகிறது. சரியான நேரத்துக்குப் பதிலடி தருவதுதான் அவசியம்” எனத் தெரிவித்தார்.
13-ம் தேதியும் ராகுல் காந்தி இதே கருத்தைத் தெரிவித்திருந்தார். அப்போது ட்விட்டரில் ராகுல் காந்தி கூறுகையில், “கரோனா வைரஸ் மிகப்பெரிய பிரச்சினை. இந்தப் பிரச்சினையை ஒதுக்கித் தள்ளுவது தீர்வாகாது. சரியான நேரத்தில் நடவடிக்கையை எடுக்காவிட்டால் இந்தியப் பொருளாதாரம் அழிந்துவிடும்” எனத் தெரிவித்தார்.