கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ், மஜத கூட்டணியில் துணை முதல்வர், அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் புதிதாக அமையும் மஜத, காங்கிரஸ் கூட்டணி அரசில் எந்த கட்சிக்கு கூடுதல் முக்கியத்துவம், எத்தனை அமைச்சர்கள், துணை முதல்வர் உள்ளிட்ட பதவிகளை பகிர்ந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மஜத தேசிய தலைவர் தேவகவுடா தலைமையில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கர்நாடக முதல்வராக மஜதவை சேர்ந்த குமாரசாமி பதவியேற்பதால், துணை முதல்வர் பதவியை காங்கிரஸுக்கு தருமாறு அக்கட்சியினர் கேட்டனர். அதற்கு சம்மதித்த தேவகவுடா, மஜதவை சேர்ந்த மற்றொருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கலாம். இதன் மூலம் இரண்டு துணை முதல்வர் பதவி ஏற்படுத்தலாம். அதில் தலித் வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கலாம் என கூறியதாக தெரிகிறது.
இதேபோல 30 பேர் முதல் 35 பேர் வரை அடங்கிய அமைச்சரவையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸார் 78 எம்எல்ஏக்களை கொண்ட தங்களுக்கு 15 முதல் 20 அமைச்சர் பதவிகள் வரை ஒதுக்க வேண்டும் என கோரியுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள தேவகவுடா முதல்வர் மற்றும் 10 முதல் 15 வரையிலான எண்ணிக்கையில் அமைச்சர்கள் வேண்டும் என கோரியுள்ளார். அதே போல மஜத கூட்டணியில் பங்கேற்று ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியும் தங்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என கோரியுள்ளது.
இதனிடையே தலித், லிங்காயத், ஒக்கலிகா, இஸ்லாமியர் ஆகிய வகுப்பினர் தங்களுக்கு அமைச்சரவையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே நேற்று டெல்லி சென்ற குமாரசாமி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பின் அமைச்சரவை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், குமாரசாமி எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.
இதனிடையே துணை முதல்வர் பதவியை பெற காங்கிரஸில் பரமேஷ்வர், டி.கே.சிவகுமார், எம்.பி.பாட்டீல் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையில் முக்கிய துறைகளை கைப்பற்ற காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் இன்றும் தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தையில் அதிகார பகிர்வு குறித்த அனைத்து விவகாரங்களும் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
(The Hindu)