கர்நாடக வாக்கெடுப்பு எப்படி நடக்கும்? சாதக பாதகங்கள் என்ன?- ஓர் அலசல்

 

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலை தனது பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் நாளை எப்படி சட்டப்பேரவை நடக்கும் எப்படி வாக்கெடுப்பு நடக்கும் என்பது குறித்துப் பார்ப்போம்.

தேர்தல் முடிவு

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் பெரும்பான்மை பெற்ற பாஜக பின்னர் 104 இடங்களில் முடங்கியது. 78 இடங்களை பெற்ற காங்கிரஸும், 37 இடங்களைப்பெற்ற மஜதவும் ஒன்றாக இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோர தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநர் பாஜகவை அழைத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றம் சென்றது.

ஆளுநர் உத்தரவு

எடியூரப்பா பதவி ஏற்க தடையில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், இன்று அதுபற்றி இடைக்கால உத்தரவை வழங்குவதாக அறிவித்தது. முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கினார் ஆளுநர். ஆனால் இன்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில் முக்கியமான சில உத்தரவுகளை பிறப்பித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவால் நெருக்கடி

எடியூரப்பாவுக்கு வழங்கப்பட்ட 15 நாட்கள் அவகாசத்தை தடை செய்து ஒரு நாள் மட்டுமே அவகாசம் வழங்கி நாளை மாலை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. மேலும் தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும், ரகசிய வாக்கெடுப்பு கூடாது கைகளை உயர்த்தி வாக்கெடுப்பை கணக்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் மூலம் பாஜகவுக்கு மீண்டும் நெருக்கடி ஆரம்பித்துள்ளது. 104 எம்.எல்.ஏக்களை வைத்து 15 நாட்களுக்குள் ஏதாவது செய்து ஆட்சியை நீடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்த பாஜகவுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கெடுப்பு முறைகள்

வாக்கெடுப்பு நடத்துவதில் 3 முறைகள் உள்ளன. அதிலும் உச்சநீதிமன்றம் சில வழிமுறைகளை விதித்துள்ளது.

ரகசிய வாக்கெடுப்பு முறை: இந்த முறையில் வாக்குப்பெட்டி வைக்கப்படும் வாக்குச்சீட்டு அளிக்கப்பட்டு எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்கள். இதிலும் மாறி வாக்களிக்க வாய்ப்பு இல்லை. காரணம் எம்.எல்.ஏக்கள் தொகுதி பெயருடன் எழுதி வாக்களிக்க வேண்டும். ஆனால் அது கடைபிடிக்கப்படாமல் போனால் சிக்கலாகி விடும்.

குரல்வாக்கெடுப்பு

ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க என்று சபாநாயகர் கூற ஆம் இல்லை என்று குரல் வரும். இதில் ஏற்போரே அதிகம் என்பதால் இந்த முடிவை எடுக்கிறேன் என சபாநாயகர் சாதாரணமாக அறிவிக்க முடியும். இந்த நடைமுறையை சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது காண முடியும். தீர்மானங்களை நிறைவேற்றும்போது சபாநாயகர் இம்முறையை கையாளுவார்.

கையை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தும் முறை:

இதைத்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த முறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பிரிவுகளாக பிரித்து அமர்த்தப்படுவார்கள். இதில் மூன்றுப்பிரிவு ஆளுங்கட்சி பாஜக உறுப்பினர்களும், அடுத்த 3 பிரிவுகளில் காங்கிரஸ், மஜத உறுப்பினர்களும் அமர்த்தப்படுவார்கள். ஏ, பி என வரிசைப்படி வாக்கெடுப்பு நடைபெறும்.

தேர்தலை தற்காலிக சபாநாயகர் உத்தரவுப்படி சட்டசபைச்செயலர் நடத்துவார். ஒவ்வொரு பிளாக்காக கையை உயர்த்த சொல்வார்கள். முதலில் எ பிளாக் ஆதரிப்போர் கையை உயர்த்துங்கள் என்பார்கள். அது கணக்கெடுக்கப்படும், பின்னர் எதிர்ப்போர் யார் என்று கேட்பார்கள் அதுவும் கணக்கெடுக்கப்படும். இதே போன்று 6 பிளாக்கையும் தனித்தனியாக கேள்விக்கேட்டு எண்ணிக்கையை குறித்துக்கொள்வார்கள்.

பின்னர் சட்டப்பேரவை செயலர் வாக்கு எண்ணிக்கையை அறிவிப்பார். சமீபத்தில் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கு கோரியபோது இந்த நடைமுறைதான் கணக்கிடப்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு முறை வேண்டும் என திமுகவும், காங்கிரஸும், ஓபிஎஸ் அணியும் கேட்டபோது சட்டப்பேரவை தலைவர் அவர்தான் முடிவெடுக்கும் முழு அதிகாரம் பெற்றவர் என்ற முறையில் கையை உயர்த்தும் வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.

என்ன சிக்கல் வரும்?

கையை உயர்த்தி வாக்களிக்கும் முறையில் சிக்கல் வரலாம். சபையில் உள்ள எண்ணிக்கை அடிப்படையில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கை உள்ளவர் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார். தற்போது உள்ள எண்ணிக்கையில் காங்கிரஸ் 77, மஜத 38 ஆதரவு சுயேட்சைகள் 2 சேர்த்து 117 பேர் உள்ளனர்.

பாஜக பக்கம் 104 மற்றும் ஆதரவு சுயேட்சை சேர்த்து 105 பேர் உள்ளனர். தற்போது உள்ள நிலையில் பாஜக வெற்றிபெற 112 பேர் தேவை. அதாவது கூடுதலாக 7 பேர் தேவை. இதில் காங்கிரஸ், மஜதவிலிருந்து குறைவான எண்ணிக்கையில் பாஜகவை யார் ஆதரித்தாலும் செல்லாது. கட்சித்தாவல் தடைச்சட்டத்தில் பாதிக்கப்பட்டு பதவி பறிபோகும்.

கட்சித்தாவி வாக்களிக்க முடியுமா?

ஒருவேளை மஜதவிலிருந்து 25 எம்.எல்.ஏக்கள் பாஜகவை ஆதரித்தால் அவர்கள் கட்சித்தாவல் தடைச்சட்டத்தில் வரமாட்டார்கள். அல்லது காங்கிரஸ் பிளவுப்பட்டு 51 பேர் பாஜகவை ஆதரித்தால் கட்சித்தாவல் தடைச்சட்டம் எதுவும் செய்ய வாய்ப்பில்லை. இது நடைமுறை சாத்தியமல்ல.

நடுநிலை பயன்படுமா?

ஒருவேளை சட்டப்பேரவையில் 14 எம்.எல்.ஏக்கள் நடுநிலை என்று அறிவித்தாலோ, அல்லது வராமல் போய் பாஜக பக்கம் 105 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்தால் எடியூரப்பா வெற்றிபெற வாய்ப்பு உண்டு. அப்படி நடக்க வாய்ப்பு மிகவும் குறைவு. காரணம் காங்கிரஸ், மஜத இருவரும் தங்கள் தரப்பு எம்.எல்.ஏக்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

4 எம்.எல்.ஏக்கள் மாயம்? மாயமில்லை…

மஜதவிலிருந்து 2 எம்.எல்.ஏக்களும், காங்கிரசிலிருந்து 2 எம்.எல்.ஏக்களும் மாயமானதாக கூறப்படுகிறது. அப்படி மாயமாகி இருந்தால் 218-ஆக எண்ணிக்கை குறையும். அப்போதும் பாஜக 110 எம்.எல்.ஏக்கள் ஆதரவை காட்ட வேண்டும். ஆனால் தங்கள் தரப்பில் அனைத்து எம்.எல்.ஏக்களும் உள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.

பயன்படாத அந்த 2 வாக்குகள்

பாஜகவின் மூத்த உறுப்பினர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதால் அவரது ஒரு வாக்கு பாஜகவுக்கு விழாது. ஒருவேளை இழுபறி நீடித்தால் அவர் வாக்கை பயன்படுத்தலாம், அப்படி ஒரு நிலை வரவாய்ப்பில்லை ஆகவே சபாநாயகரின் ஓட்டு பயன்படாது. அதே போல் குமாரசாமி இரண்டு இடத்தில் வென்றுள்ளதால் அவருக்கும் ஒரு வாக்கு என்பதால் 117-ல் 116 வாக்கு மட்டுமே அளிக்க முடியும்.

இப்படி கூட நடக்கலாம்

சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் அதை கொண்டுவர எந்த நிலைக்கும் பாஜக செல்லும், தற்காலிக சபாநாயகர் பாஜகவைச் சேர்ந்தவர், ஆட்சி அதிகாரம் கையில் என்பதால் எப்படியும் அவர்கள் பெரும்பான்மையை நிரூபித்து விடுவார்கள் என்று ஒரு பக்கமும், உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ளது. 24 மணி நேரத்தில் குதிரை பேரத்தில் ஈடுபட முடியாது. காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிட்டனர். போலீஸ் பாதுகாப்புத்தர டிஜிபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே எடியூரப்பா வாக்கெடுப்பில் நிச்சயம் தோல்வியை தழுவுவார் என்று இன்னொரு பக்கமும் விவாதம் நடக்கிறது.

1989 தமிழக சட்டப்பேரவை நிகழ்வு போல் மாறுமா?

இதில் சிலர் சட்டப்பேரவையில் அன்று அமளி நடக்கும் சிலர் வெளியேற்றப்படுவார்கள், பின்னர் நடக்கும் வாக்கெடுப்பு எப்படி இருக்கும் பாருங்கள். 1989-ல் தமிழகத்தில் நடந்த கதை தெரியாதா? என்று கூறுகின்றனர். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல்வாதிகள் எப்படி எப்படியெல்லாம் மாற்றி மாற்றி உத்தரவை மதிக்காமல் நடந்துக்கொண்டார்கள் என்ற முன்னுதாரண அடிப்படையில் இந்த வாக்கெடுப்பும் எப்படி போகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.