முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன், கல்முனை முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர் லிங்கேஸ்வரன் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
“நிபந்தனையின்றி அரசியல் கைதிகளை விடுதலை செய், பொதுமன்னிப்பு வழங்கு, நல்லாட்சி அரசில் அரசியல் கைதிகளுக்கு விடிவில்லையா?” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.
இதன்போது, அங்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், “கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் சந்தர்ப்பங்களை தவற விட்டுவிட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கன்னியா விவகாரத்தை ஜனாதிபதியிடம் கதைக்க அமைச்சர் மனோ கணேசன் கட்சி பேதமின்றி உட்பட எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் இவ்விடயம் குறித்து கதைக்க வடக்கு – கிழக்கு பகுதியில் இருந்து எந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ளவில்லை. நான் மாத்திரமே கலந்து கொண்டிருந்தேன்.
ஆனால், முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்ட போது அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜனாமாச் செய்து தங்களது இனத்தின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட்டனர். அவர்கள் தமது சமூக நலனுக்காக செயற்படுகின்றனர்.
ஆனால், எமது கூட்டமைப்பினர் பேய்க்கும் பிசாசுக்கும் வித்தியாசம் தெரியாமல் திணருகின்றனர். பேய் வரக்கூடாது என்பதற்காக பிசாசை பாதுகாக்கின்றனர்.” என்றார்.