வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் ஓர் அச்ச சூழ்நிலையை உருவாக்குவோருக்கு எதிராகவும், அவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்துவதற்கு ஏழு கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ். குடாநாட்டைப் பதற்றசூழலில் தொடர்ந்து வைக்க முயலும் அரச புலனாய்வின் நிகழ்ச்சி நிரலை விரிவாக ஆராய, ஆறு தமிழ்க் கட்சிகளை அழைத்து, ரெலோ நடத்திய இரண்டு மணிநேரச் சந்திப்பின் பின்னர், இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளுமே, இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டன.
வல்லையிலுள்ள யாழ். பீச் ஹோட்டலில், ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற சந்திப்பிலேயே மேற்கண்ட தீர்மானங்கள் எட்டப்பட்டன.
இந்தச் சந்திப்பு தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளருமான என். சிறீகாந்தா தெரிவிக்கையில்,
“வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பொதுமக்கள் மத்தியில் ஓர் அச்சசூழ்நிலை ஏற்பட்டிருப்பதையும் அதனை மேலும் தீவிரப்படுத்தும் விதத்தில் சில தரப்பினரினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைச் சுட்டிக்காட்டியும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கோரி, கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“இந்நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
“இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள். இது எங்கு எப்போது நடத்தப்படும் என பின்னர் அறிவிக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய படுகொலை தொடர்பில், பாரபட்சமற்றதும் பூரணமானதுமான புலன்விசாரணையையும், எவ்விதத் தலையீடுகளும் அற்ற நீதி விசாரணைகளையும் நாங்கள் கோருகிறோம்.
“மேலும், இப்படுகொலைகளின் பின்னணியும் காரணிகளும் விசாரணையூடாகக் கண்டறியப்பட வேண்டும் என மேலும் கோருகிறோம். இவ்விதம் முழு உண்மையும் கண்டறியப்பட்டால் மாத்திரமே, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க முடியும் என நாங்கள் தெரிவித்து நிற்கிறோம்.
இப்படுகொலைகளைத் தொடர்ந்து வாள்வெட்டுக் குழுக்கள் எனக் கூறப்படுகிற குழுக்களைச் சம்பந்தப்படுத்தி வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் மற்றும் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக, அச்ச சூழ்நிலை ஏற்பட்டிருப்பதையும் அதனை மேலும் தீவிரப்படுத்தும் விதத்தில் சிலதரப்பினரினால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
“மேலும், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலைமை தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினையும் பிரதமரினையும், கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழு சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ரெலோ சார்பில், அதன் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், யாழ். மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் செயலாளருமான என். சிறீகாந்தா, பிரதித் தலைவர் ஹென்றி மஹேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.