IFFI 2022 – கோவா பன்னாட்டுப் படவிழாவின் நடுவரும், இஸ்ரேலிய திரைப்பட இயக்குநரும் திரைக்கதையாசிரியருமான நாடாவ் லாபிட் (Nadav Lapid) படவிழாவில் பங்கேற்ற கஷ்மீர் ஃபைல்ஸைப் பார்த்துவிட்டு இப்படிச் சொன்னார் :
“நடுவர் குழுவினர் அனைவரும் அனைவரும், கஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்த்துவிட்டு சஞ்சலமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இப்படம் வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சார நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட இழிவான ஒரு படம். மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலைப்போட்டிப் பிரிவுக்கு இப்படம் கொஞ்சமும் பொருத்தமற்றது என்று நாங்கள் உணர்கிறோம். மேலும், இந்த உணர்வுகளை உங்களுடன் மேடையில் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவதில் நான் முழு நிம்மதியாக உணர்கிறேன். ஏனெனில், ஒரு திரைப்படவிழாவின் நோக்கம், கலைக்கும் வாழ்க்கைக்கும் இன்றியமையாத விமர்சன விவாதத்தை ஏற்றுக்கொள்வதுதான்!”
மாபெரும் திரைவிழாச் சபைகளில், விருதணி விழாக்களில் பல கலைஞர்கள் நியாயத்தின்பாற்பட்டு நின்று இவ்விதம் உண்மைகளைப் போட்டுடைத்த நிகழ்வுகள் முன்னமே உண்டு.
இம்முறை நாடாவ் லாபிட்.
இஸ்ரேலியனாக இருந்தாலும், தன் தாய்நாடு பாலஸ்தீனர்களின் ரத்தத்தில் முக்குளிப்பதை கண்ணுற்ற அந்தக் கலைஞனால் கஷ்மீரிகளின் கண்ணீரை வியாபாரமாக்குவதை ரசிக்க ஏலவில்லை.
அந்த ஒற்றைக் கலைஞனின் குரல் இந்தியருக்கான உரிமைக் குரலாய் சர்வதேசமெங்கும் எதிரொலித்தது
அதனால் பதறிப்போனது பாஜக அரசு மட்டுமல்ல, இஸ்ரேல் அரசாங்கமும்தான்.
காந்தி காலந்தொட்டு இஸ்ரேலை அங்கீகரிக்காத ஜனநாயகப் பண்பு இந்தியாவுக்கு இருந்தது. அதை ஆட்சிக்கு வந்த மறுகணமே அதனைத் தூக்கியெறிந்து, இஸ்ரேலின் குருதி படிந்த கரங்களுடன் கைகுலுக்கியது மோடி சர்க்கார்.
அதற்கு நன்றிக் கடனாக – தன் நாட்டு திரைக்கலைஞனின் உரிமைக்குரலை மறுதலித்து, லாபிட் தவறிழைத்துவிட்டார் என்று தூதர் மூலம் பகிரங்க மன்னிப்புக் கோரியிருக்கிறது இஸ்ரேல்.
“இந்தியா அளித்த நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பான விருந்தோம்பலையும் நீங்கள் மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள்!” என்று லாபிட்டையும் கண்டித்திருக்கிறது இஸ்ரேல்.
வந்த இடத்து அரசாங்கத்தையும், சொந்த இடத்து அரசாங்கத்தையும் பகைத்துக்கொண்டபோதிலும் – நேரிய கடமையை முடித்த திருப்தியோடு இஸ்ரேலுக்குப் புறப்பட்டிருப்பார் லாபிட்.
ஆனால் நம் குஷ்பு சொன்ன வாசகத்திலிருந்து ரெண்டு வரி சொல்கிறேன், கேளுங்கள் :
‘ஒரு பெரிய நன்றி இஸ்ரேல் தூதரே!
உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு
ஆறுதல் தைலத்தைத் தடவியது போல இருக்கிறது!”
‘A BIG thank you Ambassador @NaorGilon.
Your words act like a balm of comfort’.
(Raathan Chndrasekar)