“புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதியும் பிரதமரும், முரணான கருத்துகளை தெரிவித்துவரும் அதேவேளை, இதனை வலியுறுத்த வேண்டிய கடமையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர், வித்தியாசமான கருத்துகளைத் தெரிவிப்பதைப் பார்க்கும் பொழுது, புதிய அரசமைப்பு உருவாகுவது கானல் நீராகத் தெரிகின்றது” என, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் ஊடகங்களுக்கு நேற்று (07) அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்த அரசாங்கத்துக்கு, சிறுபான்மை மக்கள் அணிதிரண்டு வாக்களித்தது, புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காகத்தான். ஆனால் இன்று இரண்டு வருடம் கடந்த நிலையிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது சம்பந்தமாக ஆக்கபூர்வமான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, சிறுபான்மை மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“அன்று, ஜனாதிபதி சந்திரிகா அம்மையார், சமஷ்டிக்கு ஒத்த தீர்வுத் திட்டத்தை வழங்க முன்வந்த போது, ஜே.வி.பியுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் அதனைத் தீயிட்டுக் கொளுத்தியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
“ஒன்றிணைந்த எதிரணியின் நிலைப்பாட்டிலேயே, ஐக்கிய தேசிய கட்சியும் உள்ளது. மேலும், அண்மையில் அடுத்த தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்பே புதிய அரசமைப்பை உருவாக்கப் போவதாகக் கூறியிருப்பது, காலம் கடத்தும் செயலாகும்.
“அதேபோல் ஜனாதிபதியும், அரசமைப்பு மாற்றம் சம்பந்தமாக மிகவும் தடுமாற்றத்துடன் இருப்பதாகவே தெரிகின்றது. பௌத்த அமைப்புகளினதும் சிங்களக் கடும்போக்கு இயக்கங்களினதும் அழுத்தத்தின் காரணமாக தயக்கத்துடன் செயற்படுகிறாரெனத் தெரிகின்றது. அது மட்டுமின்றி, பௌத்த அமைப்புகளையும் சர்வ கட்சி மாநாட்டையும் ஏற்படுத்தி புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளமை வேதனையளிக்கின்றது.
“பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக இந்நாட்டில் வாழ்வதை கருத்திற்கொண்டு புதிய அரசமைப்பை உருவாக்க முற்பட்டால், அது நடைமுறைச் சாத்தியமற்றதாகி விடும். மேலும் அது சிங்களவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகவே இருக்கும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.