வியட்னாம், கியூபாவில், தனது இராணுவப் பிரசன்னத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ரஷ்யா கருத்திற் கொள்வதாக, ரஷ்யாவின் பிரதிப் பாதுகாப்பமைச்சர் தெரிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு, இரண்டு தளங்களை மூடுவதற்கு எடுத்த முடிவு குறித்து மீளாய்வு செய்வதாக நிகொலாய் பன்கொவ் தெரிவித்துள்ளார். பனிப்போர் காலத்தில், சோவியத் ஒன்றியத்தின் மையங்களாக இரண்டு தளங்களும் விளங்கியிருந்தன.
சிரிய விமானத்தளமொன்றில், நீண்டகால இராணுவப் பிரசன்னத்துக்கு ரஷ்யாவின் நாடாளுமன்றம் அனுமதித்துள்ள நிலையில், ஐக்கிய அமேரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டு தளங்களின் பிரச்சினை தொடர்பில் அவர்கள் கலந்துரையாடுவதாக, ரஷ்ய நாடாளுமன்றத்தில், நேற்று வெள்ளிக்கிழமை (07) பன்கோவ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எவ்வாறெனினும், இது தொடர்பான மேலதிக விவரங்களை அளிக்க அவர் மறுத்து விட்டார்.