கல்முனை நிலவரம் தொடர்பாக விசேட கலந்துரையாடல், கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.ரக்கிப் தலைமையில், மாநகர செயலகத்தில் நேற்று (16) இரவு நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
கல்முனை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில், சுமார் 15க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மேற்படி அவசர உயர் மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையான பிரதேசங்கள் இன்று காலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து, இப்பிரதேசங்களை சேர்ந்த பொதுமக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கோ, இப்பகுதிகளினுள் எவரும் உள்நுழைவதற்கோ அனுமதிக்கப்படவில்லை. இதனால் இப்பிரதேசங்களில் வீதிகள் யாவும் வெறிச்சோடிக் காணப்பட்டன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
தனிமைப்படுத்தப்பட்ட இப்பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்புடையவர்களுக்கும் எழுந்தமானமாகவும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை, மேற்படி உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், கல்முனை பொதுச் சந்தையும் நேற்றைய தினம் முடக்கப்பட்டிருந்தது.
அ ம்பாறை – பொத்துவில்:
அ ம்பாறை – பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொத்துவில், அறுகம்பே பிரதேசத்ததை உள்ளடக்கிய பி-5 கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டு, அப்பிரதேசங்களில் எழுமாறா முறையில் பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பிரதேசங்களில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கையை, பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொலிஸ், இரானுவத்தினர் ஆகியோர் இணைந்து துரிதமாக செயற்பட்டு வருகின்றனர்.
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஐ கடந்துள்ளதுடன், 97 குடும்பங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
அறுகம்பை கடற்கரை பிரதேசத்தில் நேற்று (16) 110 மீனவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அறுகம்பை சுற்றுலாப் பிரதேசம், சின்ன உல்லை, சர்வோதய புரம், ஆத்திமுனை உள்ளிட்ட பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், இப்பிரதேசங்களில் பொலிஸார், இரானுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் இப்பிரதேசங்களில் கடைகள், சற்றுலா விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டு, சன நடமாற்றமின்றி, வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இதேவேளை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்துவில், சவாலைப் பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணிக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பிரசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, அவருடன் தொடர்புடைய 32 குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
வைரஸ் தொற்றுக்கள்ளான அனைவரும் பாலமுனை மற்றும் மருதமுனை கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் .
அக்கரைப்பற்று:
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகள் 21 நாட்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், இன்று (17) காலை 06 மணிக்கு பகுதியளவில் தளர்த்தப்பட்ட நிலையில், மக்கள் வழமை நிலைக்கு திரும்பி, தங்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று பகுதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நவம்பர் மாதம் 26ஆம் திகதி அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிரப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேங்களில் பகுதியளவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில், சுகாதார திணைக்களம், பொலிஸாரின் அறிவுறுத்தல்களுக்கமைய, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும், சமூக இடைவெளிகளையும் பேணி, அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டனர்.
இப்பிரதேசங்களில் அத்தியவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் உட்பட மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளன. வங்கிகள் உட்பட அரச, தனியார் நிறுவனங்கள் இயங்கியதை காண முடிந்த போதிலும் மக்களின் வருகை மந்தகதியில் காணப்பட்டது.
வீதி ஓரங்களில் நடைபாதையில் மரக்கறிகள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அக்கரைப்பற்று-14 (காதிரியா வடக்கு), நகர் பிரிவு-03, அக்கரைப்பற்று-05, அக்கரைப்பற்று பிரதான சந்தை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை-08, பாலமுனை-01, ஒலுவில்-02 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், ஆலையடிவேம்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் அக்கரைப்பற்று-08/1, அக்கரைப்பற்று-08/03, அக்கரைப்பற்று-09 ஆகிய பிரிவுகளும் தொடர்ந்து தனிமைப்படுத்தல் பிரதேசமாக அமுலில் இருக்குமென, சுகாதரா பகுதியினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.