கிழக்கு மாகாண கரையோர மக்கள் பெரும் திண்டாட்டம்

அம்பாறை

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர், சுமார் 150 மீற்றர் தூரம் வரை ஊரை நோக்கி வந்துள்ளதுடன், ஆழ்கடல் மீனவர்களின் வலைகள், தோணிகள் சேசதடைந்துள்ளதுடன், அருகாமையில் இருந்த குடியிருப்புக்குள்ளும் நீர் புகுந்துள்ள அதேவேளை, வீட்டுத் தோட்டங்களும் நாசமாகியுள்ளன.

திருக்கோவிலில் நேற்று (17) இரவு திடீரென பாரிய சத்ததுடன் அலைகள் மேலெந்து, கடல் நீர் ஊருக்குள் வந்ததால் அப்பகுதியில் இருந்த குடும்பங்கள், சுனாமி பீதியில் இரவு முழுவதுமாக வீதிகளில் விழித்திருந்ததாகத் தெரிவித்தனர்.

ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கற்வேலிகளையும் தாண்டி, பாரிய அலைகள் எழுந்து, கடல் நீர் உட்புகுந்தது.

இதனால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ள அதேவேளை, வலைகளும் கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டதாக, மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனால் மீனவர்களுக்கு இலட்சக் கணக்கான மீன்பிடி உபகரணங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அரசாங்கத்துக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தெரியப்படுத்தவுள்ளதாகவும், மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அதேவேளை, திருக்கோவில் உட்பட பொத்துவில், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மருதமுனை பிரதேசங்களில் 4,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

மட்டக்களப்பு

வங்காள விரிகுடவில் உருவான தாழமுக்கம் காரணமாக, அம்மன் சூறாவளியென பெயரிடப்பட்ட சூறாவளியின் தாக்கம் கிழக்கின் பாசிக்குடா பிரதேசத்திலும் இன்று (18) அதிகாலை காணப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.

பாசிக்குடா கடல் அலைகள், வழமைக்கு மாறாக உயர்ந்து காணப்பட்டதுடன், அலையின் வேகத்தின் காரணமாக அலை முடிச்சு உடைந்து, கரையின் சில தூரங்களைச் சென்று, மீண்டும் நீர் வடிந்தோடியது.

பூநொச்சிமுனை, காத்தான்குடி, நாவலடி, கர்பலா உட்பட பல இடங்களில் கடல்நீர் இவ்வாறு கரையை நோக்கி வந்ததாக, மீனவர்கள் தெரிவித்தனர்.

பூநொச்சிமுனை கடற்பிரதேசத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளும் புதிய காத்தான்குடி, ஏத்துக்கால் கடற்பிரதேசத்தில் சுமார் 40 படகுகளும் கடலலைகளால், மேல் பகுதிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக, மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனால் மீனவர்களைக் கடலுக்கு செல்ல வேண்டாமென, ஒலி பெருக்கி மூலம் பொலிஸார் அறிவித்தனர்.

திருகோணமலை

சீரற்ற வானிலையால், திருகோணமலை மாவட்டத்தில் 25,000 மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

மாவட்டத்தின் கரையோர பகுதிகள் அனைத்திலும் கடல் நீர், கரையை தாண்டி வருவதால் மீனவர்களின் கடற்தொழில் படகுகள், கடற்கரையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து மூன்று நாள்களாக கடற்றொழிலாளர்கள் தமது தொழிலை இழந்துள்ளனர். மீனவர் சங்கங்கள், தமது அங்கத்தவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறு அறிவித்தல் விடுத்துள்ளன.