ஊவா மாகாண சபை தமிழ்க் கல்வி அமைச்சானது கீரியிடம் இருந்த பிடுங்கி நரியிடம் கொடுக்கப்பட்ட கதையாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார். நேற்று(24) ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் 2 வருடங்களுக்கு முன்பு பண்டாவளை நகரில் வைத்து அரச பணியாளரான தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கி பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் தற்போதும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், அதிபரை முழங்காலிட வைத்த சம்பவத்தின் குற்றவாளியான ஊவா மாகாண சபை முலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பதவியை எவ்வாறு செந்தில் தொண்டமானுக்கு வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கேள்வி எழுப்பினார்.
இன்று (24) தோட்ட, உட்கட்டமைப்பு அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் பிறந்து வளர்ந்து, மலைநாட்டு சூழலில் வளர்ந்த இலங்கை கலாசாரத்தை பின்பற்றும் ஒருவருக்கே தமிழ் கல்வி அமைச்சராவதற்குரிய தகுதி இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், பாடசாலை அதிபர் விடயத்தில் முதலமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி எடுத்துள்ள மாற்று நடவடிக்கைக்கு எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும், குறித்த விடயத்தில் சிறந்த முடிவினைப் பெற்றத்தரக் கோரியும் எதிர்வரும் 31ஆம் திகதி ஹற்றன் நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதில் அனைவரும் கலந்துக்கொண்டு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும் என்றும், அவர் தெரிவித்தார்.