காஷ்மீர் மட்டுமல்ல இன்று குஜராத்தும் பற்றி எரிகிறது. வரலாறு காணாத தலித் எழுச்சி இன்று அந்த மாநில முதல்வர் ஆனந்திபென் படேலைக் காவு கொண்டுள்ளது. அவரது பதவி விலகலுக்குப் பின் குஜராத்துக்குப் பொறுப்பேற்க பாஜகவில் எல்லோருக்கும் தயக்கம். அமித் ஷா பெயர் சொல்லப்பட்டவுடன் அவரும் தயாராக இல்லை என உடன் செய்திகள் வெளியாகின்றன. ஒரு பக்கம் படேல்களின் போராட்டம். படேல்கள் அங்கு 17 சதம்; தலித்கள் 7 சதம். காலம் காலமாக படேல்கள் பாஜகவின் ஓட்டு வங்கியாக இருந்தவர்கள். இன்று அவர்களும் பகையாய்ப் போன சூழல்.
பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் ஸ்மிருதி இரானியைப் பலி கொண்டது. ரோஹித்துன் மரணமும் கன்னையா மற்றும் உமர் காலித் ஆகியோரின் கைதும் இந்திய அளவில் மட்டுமல்ல, உலகின் கவனத்தையே ஈர்த்திருந்த சூழலில் ஸ்மிருதிஉ இரானி நாடாளுமன்றத்தில் ஆடிய ருத்ர தாண்டவத்தை நரேந்திர மோடி பாராட்டி ட்வீட்டினாலும் நாடெங்கும் எழுந்த கண்டனங்கள் இறுதியில் இரானியை கல்வித்துரையை விட்டகற்றுவதில் வெற்றி அடைந்தது.
மக்களைக் கூறுபோட்டு பகைத்தீயை வளர்த்துக் குளிர்காயும் பாஜக வின் ‘வெற்றி’ அரசியல் இன்று உ.பியிலும் தோல்வியைத் தழுவத் தொடங்கி விட்டது. தலித்களின் வாக்குகளை புத்த பிக்குகளை வைத்துச் சுரண்ட முயன்ற அமித்ஷாவுக்கு இன்று ஆப்பு வைக்கப்படுள்ளது. புத்த பிக்குகளைக் கொண்டு அவர் நடத்திய தர்ம சேத்திர யாத்ராவில் 400 தலித்கள் கூடப் பங்கு பெறவில்லை எனவும் தலித் மக்கள் “இந்த மோடியின் பிக்குகளால்” ஈர்க்கப்படவில்லை எனவும் இன்று ஊடகங்கள் குறிப்பிடுகின்ரன. இதற்கிடையில் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் எனும் நபர் குஜராத் மாநில ஊனாவில் மாட்டுத் தோலை உரித்த தலித்கள் தாக்கப்பட்டதை நியாயப்படுத்திப் பேசியது எரியும் நெருப்பை தீவிரமாக்கியுள்ளது.
செத்த மாடுகளை அகற்றும் பணியில் இனி ஈடுபடோம் என இந்தியத் துணைக் கண்டத்தில் இன்று எழுந்துள்ள தலித் முழக்கம் வரலாறு காணாத ஒன்று. ஒரு மகத்தான வரலாற்றுப் புரட்சியின் தொடக்கம் இதுதிந்துத்துவத்தின் அடி வயிற்றில் வைக்கப்பட்ட இந்தத் தீ இந்தியாவெங்கும் பரவும்.
மோடி வகை ஆட்சி மத்தியில் தொடரும் பட்சத்தில் இது இன்னும் விரைவு பெறும்.
(Marx Anthonisamy)