(எஸ். ஹமீத்.)
BBC யின் தமிழ் மொழிச் சேவையான ‘தமிழோசை’ யின் சேவை வெகு விரைவில் முடிவுக்கு வருகிறது. இந்தச் செய்தி தமிழ் நெஞ்சங்களில் மிக்க கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் அரச ஊடகமான BBC 1927ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது . ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் மட்டுமே வானொலி, தொலைக்காட்சிகளை நடாத்தி வந்த BBC காலப்போக்கில் பல்வேறு மொழிகளில் வானொலிச் சேவைகளை நடாத்தத் தொடங்கியது. இதில் தமிழ் , சிங்களம், ஹிந்தி உட்பட 27 மொழிகள் அடங்குகின்றன.
அதிகரித்த செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வருதல் மற்றும் தமிழ் மொழி வானொலி நிகழ்ச்சிகளுக்கான நேயர்களின் குறைந்த வரவேற்பு போன்ற பல காரணங்களினால் 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.பி.சி தமிழோசை வானொலி சேவையானது, தனது 76 வருடகால சேவையை இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறுத்திக் கொள்கிறது.
BBC யின் தமிழ் மொழி ஒளிபரப்பு உலகத் தமிழர்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது. அதன் செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்தனவாகவும் கருதப்பட்டன. கடந்த கால இலங்கையின் உள்நாட்டுப் போர் விடயங்களில் இலங்கை வானொலி மற்றும் தொலைகாட்சி செய்திகளைவிட உலகத் தமிழர்கள் BBC யின் தமிழ்ச் செய்திகளையே அதிகம் நம்பிக்கையோடு செவிமடுத்தார்கள்.
அத்தோடு, இணைய தளம் மூலமாக பி.பி.சி தமிழோசை தொடர்ந்து ஒலிபரப்பாகுமென்பதும் , இலங்கையில் ஒரு தனியார் வானொலியின் பண்பலைவரிசையில் தினமும் 5 நிமிட செய்திகள் மட்டும் ஒலி பரப்பப்படுமென்பதும் குறிப்பிடத்தக்கது.