பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளைத் தாக்கிய 7.5 றிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 150ஐத் தாண்டியுள்ளது. ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில், 213.5 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்ததாக, ஐக்கிய அமெரிக்காவின் சூழலியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இறந்தோர் எண்ணிக்கை 26 என அறிவிக்கப்பட்டது. இதில், தகார் மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில், 12 பெண் குழந்தைகள் இறந்துள்ளனர். அத்தோடு, அப்பகுதியில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும், இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமெனவும் அறிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானின் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உணரப்பட்டன.
பாகிஸ்தானில் குறைந்தது 85 பேர் மரணமடைந்துள்ளனர். இதில், வடமேற்கு பாகிஸ்தானில் மாத்திரம் 38 பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதிலும் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகாத போதிலும், குறைந்தது 300 பேராவது காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் புதுடெல்லியில் இந்த அதிர்வுகள் உணரப்பட்ட போதிலும், உயிரிழப்புகள் குறித்துத் தகவல்களெவையும் வெளியாகியிருக்கவில்லை.
இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இறந்தவர்களுக்காகப் பிரார்த்திருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இடம்பெற்ற நிலநடுக்கத்தின் அளவு 7.7 என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது 7.5 றிக்டர் என மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.