விசேட மேன்றையீடு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
கூட்டு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டிருக்கும் போது அதனை நீதிமன்றத்தினூடாக அந்த கூட்டு ஒப்பந்தத்தின் தரப்புகளான தொழில் வழங்குநருக்கோஃ கம்பனிகளுக்கோ அல்லது தொழிலாளர்கள் சார்பாக கையொப்பமிடும் தொழிற்சங்கங்களுக்கோ அல்லது நேரடியாக தொழிலாளர்களுக்கோ, நீதிமன்றத்தினூடாக கூட்டு ஒப்பந்தத்தை முடிவுறுத்தவோ கேள்விக்கு உட்படுத்தவோ முடியாது, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அல்லது முதலாளிமார் சம்மேளனம் தொழில் ஆணையாளருக்கு அறிவிப்பதன் மூலமே அதனை முடிவுறுத்த முடியும் என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா தாக்கல் செய்திருந்த விசேட மேன்முறையீடு பற்றிய விசாரணையின் போது உயர் நீதிமன்றம் தெரிவித்து அவரின் மனுவை நிராகரித்தது. குறித்த விசேட மேன்முறையீடு மீதான விசாரணை 17-01-2019ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, விஜித மல்லகொட மற்றும் முருது பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்குறித்த காரணம் கூறப்பட்டு மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது.2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள கூட்டு ஒப்பந்தம் தொழிற்சட்டங்களுக்கு முரணானது என்பதாலும், அடிப்படை கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரானதும் என்பதாலும் அதனை இரத்துச் செய்யுமாறும் புதிய கூட்டு ஒப்பந்தத்தை செய்ய தொழில் ஆணையாளர் ஊடாக பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பாக ஒப்பந்தமிடும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகிய தொழிற்சங்கங்களுக்கு கட்டளையிடுமாறும் சட்டத்தரணி இ. தம்பையா மேன்முறையீட் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த ரிட் மனு அந் நீதிமன்றத்தினால் அவருக்கு வழக்கிடுவதற்கான தகைமை இல்லை என்ற எதிராளிகளின் முதற்கட்ட ஆட்சேபனையை ஏற்று தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் இந்த விசேட மேற்முறையீட்டை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
விசேட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா கருத்து தெரிவிக்கையில், எமது சக்திக்கு உட்பட்டு 2016ஆம் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தொழிற்சட்டத்திற்கு முரணானது என நாம் வலியுறுத்தி வந்துள்ளோம். தொழில் ஆணையாளரிடம் 2016ஆம் ஆண்டு சம்பள கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் முன்னைய கூட்டு ஒப்பந்தத்தங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தோம். 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யபட்டப் பின்னர் அதில் உள்ள தொழிற்சட்டத்திற்கு முரணான ஏற்பாடுகளை சுட்டிக்காட்டி அதற்கு சட்ட அந்தஸ்த்து கொடுக்க வேண்டாம் என்று சுட்டிக்காட்டினோம். எனினும் தொழில் ஆணையாளர் அதற்கு எந்தவிதமான மறுமொழியையும் வழங்காத நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தோம். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக விசேட மேன்முறையீட்டை செய்திருந்தோம். எமது இந்த வழக்காடல்களின் அல்லது நீதிமன்றத்தினூடான போராடத்தின் பிரதான நோக்கம் 2016 கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள சட்ட முரணான விடயங்களை அம்பலப்படுத்துவதே. எமது அந் நோக்கம் ஓரளவேனும் நிறைவேறியுள்ளது என்ற திருப்தி எமக்கு இருக்கிறது.
நீதிமன்ற கட்டளையில் இருந்து வெளிப்படும் விடயம் என்னவெனில் 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்த்திலிருந்து வெளியேறி அதனை முடிவுறுத்துவதன் மூலமே தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் ஏற்பாடுகளுடன் புதிய கூட்டு ஒப்பந்தத்தை செய்துகொள்ள வழி ஏற்படும் என்பதாகும். இதனை இ.தொ.கா., இ.தொ.தே.தொ.ச., மற்றும் பெ.தொ.நிலையம் என்பன ஏற்றுக் கொண்டு வரட்டுக் கௌரவத்தை விட்டுச் செயற்பட வேண்டும்.
எமது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடிப்படையாக கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தத்தை சட்ட ரீதியானது என ஏற்று கொண்டுள்ளது என தவறாக கருதக்கூடாது. சட்ட ரீதியான தன்மையை ஒப்பந்தத்தில் 3ஆம் தரப்பாக உள்ள நாங்கள் பொது மக்கள் அக்கறை என்ற வகையிலும் கேள்விக்குட்டுத்த முடியாது என்பதே என்பதே நீதிமன்றத்தின் முடியாகும். இதிலிருந்து எந்தவொரு கூட்டு ஒப்பந்தத்தையும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த முடியாது என்ற முடிவிற்கு வரலாம். இது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி இலங்கையின் அனைத்து துறை தொழிலாளர்களுக்கும் ஏற்புடையதாகலாம். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினூடாக எமது நீதிமன்ற நடவடிக்கை வந்துவிட்டாலும் நாம் வேறு நடவடிக்கைகளை கைவிடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இ. தம்பையா
071-4302909